- திருவள்ளூர் மாவட்டம்
- சுகாதார துறை
- திருவள்ளூர்
- தமிழ் சுகாதாரத் துறை
- இரத்த சோகை
- சேலம் ஆத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருவள்ளூர்: தமிழக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 சதவீதம் பேருக்கு கடுமையான ரத்தசோகை பாதிப்பும், சேலம் ஆத்தூரில் 62 சதவீதம் பேருக்கு மிதமான ரத்தசோகை பாதிப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை ரத்தசோகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கான மாதிரிகள் பள்ளிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஹீமோகுளோபின் மதிப்பீட்டை பயன்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அனீமியா முக்த் பாரத் செயல்பாட்டு வழிமுறைகளுடன் ரத்தசோகை பாதிப்பை கடுமையான பாதிப்பு, மிதமாக, குறைவான பாதிப்பு என வகைப்படுத்தப்பட்டது. ஆய்வில் இளம் பருவ வயதினரில் 1.6 சதவீதம் பேருக்கு கடுமையான ரத்தசோகை பாதிப்பும், 44.4 சதவீதம் பேருக்கு மிதமாக ரத்தசோகை பாதிப்பும், 54.1 சதவீதம் பேருக்கு குறைந்த அளவிலான ரத்தசோகை பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார கணக்கெடுப்பு 2019-21ன் படி இளம்பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு 52.9 சதவீதமாகவும், ஆண்களுக்கு 24.6 சதவீதமாகவும் உள்ளது. இளம் பருவ வயதினருக்கு ரத்தசோகையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 84 சதவீதம் பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 70 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இளம் பருவ ஆண்களிடையே குறைவான ரத்தசோகை பாதிப்பும், இளம்பெண்கள் மிதமான மற்றும் கடுமையான ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 சதவீத இளம்பெண்களுக்கு கடுமையான ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 சதவீதம் பேருக்கும், ஈரோட்டில் இளம்பருவ ஆண்களில் இரண்டு சதவீதம் பேரும் கடுமையான ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இளம் பருவ ஆண்களில் 66 சதவீதம் பேரும், கள்ளக்குறிச்சியில் 54 சதவீதம் பேரும் மிதமான ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 90 சதவீத இளம் பருவ வயதினருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 74 சதவீதம் பேருக்கு குறைவான ரத்தசோகை பாதிப்பும் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 71 சதவீதம் பேருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரில் இளம்பருவ பெண்கள் 62 சதவீதம் பேருக்கும் மிதமான ரத்தசோகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள இளம்பருவ பெண்களுக்கு குறைவான ரத்தசோகை பாதிப்பு உள்ளது.
குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் 74 சதவீதம் பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 73 சதவீதம் பேருக்கும் குறைவான ரத்தசோகை பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: ரத்தசோகை பாதிப்பை நீண்ட காலமாக கவனிக்காமல் இருக்கும்போது பல்வேறு விதமான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ரத்தசோகை இல்லாத இந்தியா திட்டத்தின் மூலம் இரும்புச்சத்து மற்றும் போலீக் ஆசிட் மாத்திரைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பிய சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை கீரை வகைகள், பால், முட்டை, பீன்ஸ், உலர்ந்த பழங்கள், திராட்சை, பயறு, பாஸ்தா, பட்டாணி, கொண்டைக்கடலை, உளுந்து, பாதாம் பருப்பு, கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, எள் போன்றவற்றில் புரதச்சத்தும், இரும்புச்சத்தும் உள்ளது.
ஈரல், மீன், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவற்றிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பேரிச்சம்பழம், இறைச்சி உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யாப்பழம் ஆகியவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெல்லம் ரத்தசோகையை போக்கும் எளிய வகை உணவுப்பொருளாகும். இவ்வாறு கூறினர்.
The post ரத்தசோகையால் இளைஞர்களைவிட இளம்பெண்களுக்கு அதிக பாதிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் 6% பேருக்கு கடுமையான பாதிப்பாம்: சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.