- பிரியங்கா காந்தி
- வயநாடு
- ராகுல்
- சோனியா, கார்கே
- திருவனந்தபுரம்
- காங்கிரஸ்
- வயனட் மக்களவை
- ராகுல் காந்தி
- சோனியா
- கார்கே
- தின மலர்
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங். கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 25ம் தேதி ஆகும். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை (23ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதற்காக இன்று அவர் கேரளா வருகிறார். பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வயநாடு வருகின்றனர். நாளை காலை 11 மணியளவில் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் காங்கிரஸ் கூட்டணியின் பிரம்மாண்ட ரோட் ஷோ நடைபெறுகிறது. இதில் பிரியங்காவுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்து கொள்கின்றனர். கல்பெட்டா புதிய பஸ் நிலையம் அருகே இருந்து புறப்படும் இந்த ரோட் ஷோ கலெக்டர் அலுவலகம் வரை நடைபெறுகிறது.
இதன் பின்னர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேக யிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். பிரியங்கா காந்தி வயநாட்டில் ஒரு வாரத்திற்கு மேல் தங்கியிருந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வந்த அன்றே வயநாட்டில் காங்கிரஸ் கூட்டணியினர் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான முக்கிய தலைவர்கள் பிரசாரத்திற்காக வயநாட்டுக்கு வருவதால் காங்கிரஸ் கூட்டணியினர் உற்சாகமடைந்துள்ளனர். இடதுசாரி கூட்டணி வேட்பாளரான சத்யன் மொகேரி மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் வயநாட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
* கார்கேயிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா
வயநாட்டில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ள பிரியங்கா நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரிடம் பிரியங்கா வாழ்த்து பெற்றார்.
* தேர்தல் மன்னன் 245வது முறையாக வேட்பு மனு தாக்கல்
பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஷாபி பரம்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடகரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் மன்னனான கே. பத்மராஜன் நேற்று பாலக்காடு தொகுதியில் 245வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியான ஜித்திடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இவர் 244வது முறையாக வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வயநாட்டில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல்: ரோட் ஷோவில் ராகுல், சோனியா, கார்கே பங்கேற்கின்றனர் appeared first on Dinakaran.