×

தாம்பரம் மாமன்ற கூட்டம்: அதிகாரி மீது கவுன்சிலர் புகார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில், ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், கல்வி குழு தலைவர் கற்பகம் சுரேஷ், எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், குப்பை அகற்றுதல், சாலை பராமரிப்பு போன்ற குறைகளை மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாநகராட்சி மேயர் வசந்தகுமார் கமலக்கண்ணன் மற்றும் ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் உறுதி அளித்தனர். கூட்டத்தில் 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா, தனது வார்டில் பாதாளச் சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் வைத்த மோட்டா, மாநகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் எடுத்துச் சென்றதாகவும், இதனால் பொதுமக்கள் தன்னை திட்டுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் மாநகராட்சி அதிகாரி பழனியின் செயலால் தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை மேயர் கண்டித்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் பாலச்சந்தர் உறுதி அளித்தார். மாநகராட்சி அதிகாரி பழனி தொடர்ந்து இது போன்ற பல்வேறு அலட்சிய பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என யார் எந்த ஒரு பணிகள் மற்றும் புகார்கள் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் அவரது தேவைக்கு ஏற்ப அவர் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 122 தீர்மானங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. முன்னதாக கூட்டத்தில், தொடர்ந்து மாநகராட்சியில் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை, தொடர்ந்து தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post தாம்பரம் மாமன்ற கூட்டம்: அதிகாரி மீது கவுன்சிலர் புகார் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tambaram Municipal Corporation ,Mayor ,Vasantakumari Kamalakannan ,Commissioner ,Balachander ,D. Kamaraj ,S. Indran ,E. Joseph Annadurai ,V. Karunanidhi ,S. Jayaprateep ,Perungalathur Shekhar ,
× RELATED சேலையூர் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்: வனத்துறையிடம் ஒப்படைப்பு