மிர்பூர்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 40.1 ஓவரில் 106 ரன்னுக்கு சுருண்டது. தொடக்க வீரர் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 30 ரன், தைஜுல் இஸ்லாம் 16, மிராஸ் 13, முஷ்பிகுர் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.
தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் காகிசோ ரபாடா, வியான் முல்டர், கேஷவ் மகராஜ் தலா 3 விக்கெட், டேன் பியட் 1 விக்கெட் கைப்பற்றினர். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை ரபாடா நேற்று எட்டினார். டேல் ஸ்டெயின், ஷான் போலக், மகாயா நிட்டினி, ஆலன் டொனால்டு, மார்னி மார்கெல் ஆகியோரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்துள்ளது (41 ஓவர்).
டோனி டி சோர்ஸி 30, ரிக்கெல்டன் 27, ஸ்டப்ஸ் 23, பெடிங்ஹாம் 11, கேப்டன் மார்க்ரம் 6 ரன்னில் வெளியேறினர். கைல் வெர்ரைன் 18, வியான் முல்டர் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 15 ஓவரில் 2 மெய்டன் உள்பட 49 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். ஹசன் மகமது 1 விக்கெட் எடுத்தார். கை வசம் 4 விக்கெட் இருக்க 34 ரன் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா இன்று 2வது நாள் ஆட்டத்தில் முன்னிலையை மேலும் அதிகரிக்க முயற்சிக்கும்.
The post வங்கதேசம் 106 ரன்னில் சுருண்டது: தென் ஆப்ரிக்காவும் திணறல் appeared first on Dinakaran.