×
Saravana Stores

இந்தியாவுடன் முதல் டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

பெங்களூரு: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 46 ரன்னில் சுருண்ட நிலையில், நியூசிலாந்து 402 ரன் குவித்தது. ரச்சின் ரவிந்த்ரா 134, கான்வே 91, சவுத்தீ 65 ரன் விளாசினர். இதையடுத்து, 356 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா சர்பராஸ் கான் – ரிஷப் பன்ட் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 462 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

கேப்டன் ரோகித் 52, கோஹ்லி 70, சர்பராஸ் 150, பன்ட் 99 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். 2வது இன்னிங்சிலும் இந்திய அணி 54 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை பறிகொடுத்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது.

பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் டாம் லாதம் டக் அவுட்டாகி வெளியேற இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். அடுத்து கான்வே 17 ரன் எடுத்து பும்ரா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். எஞ்சிய விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தும் முனைப்புடன் இந்தியா தாக்குதலை தீவிரப்படுத்தியது. எனினும், வில் யங் – ரச்சின் ரவிந்த்ரா ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி ரன் சேர்க்க, நியூசிலாந்து 27.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

வில் யங் 48 ரன் (76 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ரச்சின் 39 ரன்னுடன் (46 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 134 ரன், 2வது இன்னிங்சில் 39* ரன் விளாசிய ரச்சின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அக்.24ல் தொடங்குகிறது.

The post இந்தியாவுடன் முதல் டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,New Zealand ,Bengaluru ,M. Chinnaswamy Stadium ,Dinakaran ,
× RELATED ஒயிட்வாஷ் முனைப்பில் நியூசிலாந்து...