வத்திராயிருப்பு, அக்.18: மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனையடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு மழை எச்சரிக்கையால் அனுமதியை ரத்து செய்து வனத்துறையினர், கோயில் நிர்வாகம் அறிவித்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தொடர்ந்து மழை பெய்து வருவதால் சதுரகிரி மலை ஓடைகளில் நீர்வரத்து appeared first on Dinakaran.