×
Saravana Stores

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் டெல்லி-தமிழ்நாடு இன்று மோதல்

டெல்லி: நாட்டின் முக்கிய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2வது சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகின்றன. மொத்தம் 38 அணிகள் மோதும் ஆட்டங்கள் நாட்டின் 19 நகரங்களில் நடக்கின்றன. எலைட் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது 2வது சுற்று லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர் கொள்கிறது. டெல்லியின் நடைபெறும் இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு புதியக் கேப்டனுடன் களம் காண உள்ளது. காரணம் கேப்டன் சாய் சுதர்சன் இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

எனவே துணைக் கேப்டன் நாரயண் ஜெகதீசன் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். சாய் கிஷோர் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அணியில் ஜெகதீசனுடன் இணைந்து விஜய சங்கர், இந்தரஜித், சாய் சுதர்சன் அஜித் ராம், ஆந்த்ரே , மணிமாறன், ஷாருக்கான், முகமது ஆகியோருடன் வட மாநில வீரர்களும் அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். கூடவே முதல் ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்திய உற்சாகத்துடன் தமிழ்நாடு இன்று டெல்லியை எதிர்கொள்ள உள்ளது.
அதே நேரத்தில் ஹிம்மாத் சிங் தலைமையிலான டெல்லி முதல் ஆட்டத்தில் சட்டீஸ்கரிடம் டிரா தான் செய்துள்ளது.

அதனால் முதல் வெற்றி முனைப்பில் நவ்தீப் சைனி, ஹிம்மான்சு சவுகான், ஜான்டி சித்து, சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் அசத்த காத்திருக்கின்றனர். சாய் கிஷோர் போல் டெல்லியின் முக்கிய வீரர்கள் வீரர்கள் அனுஜ் ராவத், ஆயுஷ் பதோனி ஆகியோர் இந்தியா ஏ அணியில் விளையாட சென்றுள்ளனர். எப்படி இருந்தாலும் இந்த 2 அணிகளும் மோதிய ரஞ்சி ஆட்டங்கள் பெரும்பாலும் டிராவில்தான் முடிந்துள்ளன. அதிலும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களும் டிராவில்தான் முடிந்து இருக்கின்றன. அந்த வரலாறு இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு மாற்றும் வாய்ப்பு உள்ளது.

* புதுச்சேரி-விதர்பா
எலைட் பி பிரிவில் உள்ள அருண் கார்த்திக் தலைமையிலான புதுச்சேரி 2வது சுற்று லீக் ஆட்டத்தில் விதர்பா அணியை எதிர்கொள்கிறது. முதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் டிரா செய்த புதுச்சேரியும், ஆந்திராவை வீழ்த்திய விதர்பாவும் மோதும் இந்த ஆட்டம் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது.

* சதர்ன் சூப்பர்ஸ் ஸ்டார்ஸ் சாம்பியன்
ஸ்ரீநகரில் நடந்த லெஜண்ட் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் சதர்ன் சூப்பர்ஸ் ஸ்டார்ஸ்-கொனார்க் சூரியாஸ் ஒடிஷா அணிகள் களம் கண்டன. முதலில் விளையாடிய சதர்ன் அணி 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164ரன் எடுத்தது. அடுத்து ஆடிய ஒடிஷாவும் 20ஓவர் முடிவில் 9விக்கெட்களை பறிகொடுத்து 164ரன் எடுத்தது. அதனால் ஆட்டம் சரிநிகர் சமனில் முடியவே வெற்றி சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது. முதலில் விளையாடிய ஒடிஷா ஒரு விக்கெட் இழப்புக்கு 13ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய சதர்ன் அணி ஒரு விக்கெட் இழந்து 14ரன் எடுக்கவே கேதர் ஜாதவ் தலைமையிலான சதர்ன் அணி கோப்பையை கைப்பற்றியது.

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட் டெல்லி-தமிழ்நாடு இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Ranji Cup Cricket Delhi-Tamil Nadu ,Delhi ,Ranji ,Tamil Nadu ,Ranji Cup Cricket Delhi ,Dinakaran ,
× RELATED ரஞ்சி ரவுண்டப்…