×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

சென்னை: அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை கொண்டாடிய பிறகு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். அதுபற்றி இனி எந்த செய்தியும் போடாதீர்கள் என்று கோபமாக கூறினார். அதிமுக 53வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி, அலுவலகத்தில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு அதிமுக தொடங்கப்பட்டு 53வது ஆண்டு விழா மிக எழுச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழியும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சென்னையில் 14, 15ம் தேதி மழை பெய்தது. 16ம் தேதி மழையே இல்லை. ரெட் அலர்ட் கொடுத்த பிறகு மழையே இல்லை. குறைந்த அளவு மழை பெய்த காலக்கட்டத்தில் கூட சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் முதல்வர், மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

கனமழை பெய்யும் என்று அறிந்து, சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்வாய் பணிகளை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதிமுக ஆட்சியில் கூவம், அடையார் பகுதியில் உள்ள 13,850 குடியிருப்புகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, 48 கி.மீ. நீளமுள்ள 30 கால்வாய்களை அவ்வப்போது தூர்வாரிக் கொண்டே இருந்தோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முழுமையாக தூர்வாராத காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னையில் கனமழை பெய்யும்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. வெள்ள நீர் வடிவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. அரசுக்கு இந்த கமிட்டி என்ன பரிந்துரை செய்துள்ளது என்ற விவரம் மற்றும் வெள்ளை அறிக்கை கேட்டேன்.

நேற்று துணை முதல்வர், சென்னையில் தண்ணீர் வடிந்துள்ளது, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். மழை இல்லாததால் வெள்ளம் இல்லை. தண்ணீர் தேங்கவில்லை, அதுதான் நிலைமை. அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள். என்னுடன் இருக்கும் 6 பேர் (எஸ்.பி.வேலுமணி உள்பட) வந்து அதிமுகவை இணைக்க வேண்டும் என்று என்னிடம் கூறியதாக ஊடகங்களில் செய்தி போடுகிறீர்கள். விவாத மேடை நடத்துகிறீர்கள். அத்தனையும் பச்ச பொய். திருப்பி திருப்பி சொல்லியாச்சி, தயவு செய்து விட்டு விடுங்கள். எங்கள் (எடப்பாடி) தரப்பில் இருப்பதுதான் அதிமுக. இன்றைக்கு அதிமுகவுக்கு கட்சி விரோதமாக செயல்பட்டவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். அதனால் ஒன்னா போச்சு, இரண்டாக போச்சு என்ற கேள்வியை தயவுசெய்து ஊடகங்கள் விட்டு விடுங்கள்.

நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிகளில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், பொன்னையன், கோகுலஇந்திரா மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

The post அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,Edappadi Palanichami ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...