×

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது: 11,500 மீனவர்கள் வீடுகளில் முடக்கம்

திருச்சி: தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் மழை காரணமாக அம்மாபேட்டை, சாலியமங்கலம், விழுதூர், குழிமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் ஒரத்தநாடு திருமத்தி பகுதியில் 500 ஏக்கர் சம்பா இளம் நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விளைநிலங்கள் ஏரி போல் காட்சியளிக்கிறது.

திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி, காளாச்சேரி, மேலபூவனூர் உள்ளிட்ட இடங்களில் 5,000 ஏக்கர் குறுவை நெற்பயிர் நீரில் மூழ்கியது. அதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வைரிசெட்டிபாளையம், கோட்டபாளையம், வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெற்பயிரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1500 பைபர் படகு, 800 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகளை கரையில் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

சுமார் 1500 பேர் கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக ஆறுக்காட்டுதுறை மற்றும் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் நேற்று அவசரம் அவசரமாக கரை திரும்பினர். தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மற்றும் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக வீரபாண்டி பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான வயல் பரப்பில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

* அணை நிரம்பியதால் 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.30 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1280 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி ஆகிய 8 கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இதேபோல ஈரோடு மாவட்டம் கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணை நிரம்பி 256 கன அடி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அணையின் நீர் வழிப்பாதையில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணை, பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கன மழை காரணமாக நிரம்பியதால், அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

* சுவர் இடிந்து பெண் சாவு
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடி 13வது வார்டு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி கற்பகம் (38). நேற்று மாலை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. கற்பகம் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டருகே சாலையில் நடந்து வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து கற்பகத்தின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

The post டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது: 11,500 மீனவர்கள் வீடுகளில் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delta districts ,Trichy ,Thanjavur district ,Ammapet ,Saliyamangalam ,Viludur ,Kulimattur ,
× RELATED உடமைகளை பத்திரமாக எடுத்து...