×

நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு.! வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் இன்று வெப்பச்சலனத்தால் மழை பெய்யும். இந்த மழை இன்று இரவும் நாளை காலையும் நீடிக்கும். காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் டமால் டுமீல் மழை இருக்கும் என்றும் அவை மக்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும் என்றும் அச்சப்படுத்தும் வகையில் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவான நிலையில் சென்னையில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை வரை அதிக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கெனவே வடிகால்கள் தூர்வாரப்பட்டதால் மழை பெய்த ஒரு மணி நேரத்தில் சாலையில் தேங்கிய தண்ணீர் வடிந்துவிட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய தினமும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. காற்றழுத்தமானது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றின் திசை மாறுபாடு காரணமாக காற்றழுத்தமானது தெற்கு ஆந்திராவை நோக்கி சென்றது. இதனால் திருப்பதி, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் நேற்று சென்னைக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் நீக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் மழை ஒரு சொட்டு கூட இல்லாமல் வெயில் இருந்தது. அதே வேளையில் இன்றைய தினம் வெப்பச்சலனத்தால் மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான் நாளையும் மழை இருக்கும் என்கிறார்கள். சென்னையில் இன்று அதிகாலை முதலே முகப்பேர், அண்ணாநகர், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு.! வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Weatherman ,Pradeep John ,Chennai ,Weatherman Pradeep John ,Kanchipuram ,Thiruvallur ,Chengalpattu ,
× RELATED நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் அதிக மழை...