×
Saravana Stores

பெங்களூருவில் இந்தியா, நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

பெங்களூரு: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கும் நிலையில், 2வது டெஸ்ட் புனே (அக். 24-28), 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் (நவ. 1-5) நடைபெற உள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு முன்னேறுவதில் அணிகளிடையே இழுபறி நீடிப்பதால், இந்த தொடரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.ரோகித் தலைமையிலான இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகித்தாலும், பலம் வாய்ந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் விளையாட உள்ள 8 டெஸ்ட் போட்டிகளில் கணிசமான வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்திய வீரர்களின் தன்னம்பிக்கை, உற்சாகத்தை வெகுவாக அதிகரித்துள்ளது. அதிலும், மழையால் பாதிக்கப்பட்ட கான்பூர் டெஸ்டில் அதிரடி வியூகத்தை பிரயோகித்து பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. 10 டெஸ்டில் குறைந்தபட்சம் 7 வெற்றி தேவை என்ற நிலையில், வங்கதேசத்தை 2-0 என வீழ்த்தியது சற்று நெருக்கடியை குறைத்துள்ளது என்றாலும், எஞ்சியுள்ள ஒவ்வொரு போட்டியையும் ரோகித் & கோ மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். பெங்களூருவிலும் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருவதால் ஆட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனினும், எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் அதிநவீன மழை நீர் வடிகால் வசதி உள்ளதால், மழை நின்ற அரை மணி நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வானம் மேகமூட்டமாக இருக்கும் என்பதால் இரு அணிகளுமே வேகப் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியூகம் வகுக்கலாம். கில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படுவதால், அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் களமிறக்கப்படலாம். நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், பன்ட், அஷ்வின், ஜடேஜா என இந்திய பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளதால், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களுக்கு சரியான சவால் காத்திருக்கிறது.

காயம் காரணமாக கேன் வில்லியம்சன் பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதும் நியூசி. சற்று அணிக்கு பின்னடைவுதான். இலங்கையுடன் நடந்த தொடரில் 2-0 என ஒயிட்வாஷ் ஆனதும் அந்த அணி வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. முன்னாள் உலக டெஸ்ட் சாம்பியனான நியூசி. புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கடைசியாக நியூசிலாந்து அணி இந்தியா வந்து விளையாடியபோது அஜாஸ் படேல் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது, டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன் மைல்கல்லை எட்டும் 4வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற, கோஹ்லிக்கு இன்னும் 53 ரன் மட்டுமே தேவை. இந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இதுவரை 97 சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக, 2022 சீசனில் இங்கிலாந்து 89 சிக்சர் அடித்திருந்தது. இந்தியா கடைசியாக விளையாடிய 5 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் ஒரு வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் 62 டெஸ்டில் மோதியுள்ளதில் இந்தியா 22-13 என முன்னிலை வகிக்கிறது (27 டிரா). கடைசியாக மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த டெஸ்டில் (டிச. 2021) இந்தியா 372 ரன் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக மோதிய 5 டெஸ்டில் நியூசிலாந்து 3-1 என முன்னிலை வகிக்கிறது (1 டிரா).

The post பெங்களூருவில் இந்தியா, நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,New Zealand ,Bengaluru ,M. Chinnaswamy Stadium ,Dinakaran ,
× RELATED ஒயிட்வாஷ் முனைப்பில் நியூசிலாந்து...