×

கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 1500 பேருக்கு சமைக்க அதிநவீன சமையல் கூடங்கள்: அம்மா உணவகத்தில் பொருட்கள் இருப்பு வைக்க ஏற்பாடு

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் 300 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. இங்கு தண்ணீர், பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன. குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 35 சமையல் கூடங்கள் உள்ளன, இங்கு நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் அனைத்து தேவையான உணவு பொருட்களையும் இருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த வார்டுகளில் உள்ள கவுன்சிலர்கள், எவ்வளவு உணவு என வேண்டும் என அம்மா உணவகத்திற்கு சொன்னால் அம்மா உணவகத்தில் உணவு தயார் செய்யப்படும். அப்படி இல்லையென்றால், உணவு பொருட்கள், சிலிண்டர் தேவைப்பட்டால், அங்குள்ள நிவாரண மையங்களுக்கு அனுப்பப்படும். கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1000 முதல் 1500 பேர் வரைக்கும் சமைப்பதற்கு அதிநவீன சமையல் கூடமும் தயார்நிலையில் இருக்கின்றது.

அம்மா உணவகங்களில் வழக்கம் போல், உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலவசம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் மரம் விழுந்தாலோ, மழை நீர் அடைப்பு இருந்தால் அதனை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி ஊழியர்களும் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

* மழையில் பணியாற்றுவோருக்கு மாத்திரைகள்…

மழையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு டாக்ஸிசைக்ளின் (DOXYCYLINE) ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் மழைக்காலங்களில் குப்பை சேகரிக்கும் மற்றும் அகற்றும் பணியில் 11,000 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் காலையில் 65% பேரும், மதியம் 15% பேரும், இரவு 25% பேரும் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 1500 பேருக்கு சமைக்க அதிநவீன சமையல் கூடங்கள்: அம்மா உணவகத்தில் பொருட்கள் இருப்பு வைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Gopalapuram, Sindathirippet, Kodambakkam ,Amma ,Chennai ,Gopalapuram ,Sindathirippet ,Kodambakkam ,
× RELATED சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம்...