×
Saravana Stores

குடியிருப்பு பகுதியில் சாவகாசமாக நடந்து சென்ற யானைகளால் அச்சம்: அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்


தேன்கனிக்கோட்டை,: தேன்கனிக்கோட்டை அருகே, இரவு 2 யானைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து சாவகாசமாக நடந்து சென்றதை கண்ட கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் 4 யானைகள், ஆலஹள்ளி வனப்பகுதியில் 3 யானைகள் என 7 யானைகள் கடந்த 6 மாதமாக முகாமிட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ள யானைகள் அருகில் உள்ள மரகட்டா, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகானப்பள்ளி, ஏணிமுச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி ஆகிய கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து ராகி, அவரை, துவரை பயிர்களை நாசம் செய்து வருகிறது. யானைகளை விரட்ட வனத்துறை சார்பில் தனி குழு அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் இந்த குழுவினர் யானைகளை கண்காணித்து பட்டாசு வெடித்து விரட்டினாலும், பயிர்களை சாப்பிட்டு பழக்கப்பட்ட யானை கூட்டம், தினந்தோறும் இருப்பிடத்தை மாற்றி கொண்டு அட்டகாசம் செய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, ஆலஹள்ளி வனப்பகுதியிலிருந்து வந்த 2 யானைகள், குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இதையறிந்த மக்கள், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். இதனால், பக்கத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராம குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகள், ராகி பயிர்களை சாப்பிட்டு சாலையை கடந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி சென்றன. யானைகள் நடந்து சென்ற காட்சி, அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அவை சமூக வலைதளங்களில் பரவி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, யானைகள் விவசாய நிலங்களில் புகாதவாறு தடுக்க வேண்டும். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குடியிருப்பு பகுதியில் சாவகாசமாக நடந்து சென்ற யானைகளால் அச்சம்: அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thenkanikkottai ,Krishnagiri District ,Thenkanikotte Wildlife Sanctuary ,Noganur forest ,Alahalli forest ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு தகாத...