திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவாரூரில் இன்று காலை மழை இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள தெற்குபடுகை, வாக்கோட்டை, வஞ்சியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 30 நாட்களான சம்பா நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் வயலிலே அழுகும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடனடியாக வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கணக்கெடுப்பு பணியை உடனடியாக துவங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.