- ஜார்க்கண்ட்
- மகாராஷ்டிரா சட்டமன்ற
- இந்திய தேர்தல் ஆணையம்
- தில்லி
- மகாராஷ்டிரா
- Sivasena
- ஏக்நாத் ஷிண்டே
- தேசியவாத காங்கிரஸ்
- அஜித் பவார்
- பாஜக
- அக்நாத் ஷிண்டே
- தேவேந்திர பட்னாவிஸ்
- துணை
- மகாராஷ்டிரா சட்ட
- தின மலர்
டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர்களாக தேவேந்திர பட்நாவிசும், அஜித் பவாரும் உள்ளனர். 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை உள்ளடக்கிய ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக் காலம் அடுத்தாண்டு ஜனவரி 5ம் தேதியுடன் முடிவு பெறுகிறது.
எனவே மேற்கண்ட இரு மாநில சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடைவதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம். அதனால் இருமாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், சமீபத்தில் இரு மாநிலங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டமாகவும், அரியானாவுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அரியானாவில் பாஜக 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா தேர்தல் முடிவுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்;
மகாராஷ்டிரா தேர்தல் தேதி அறிவிப்பு
மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 29 கடைசி தேதி. வேட்பு மனுக்கள் அக்டோபர் 30ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப்பெற நவம்பர் 4ம் தேதி கடைசி நாள். நவம்பர் 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.63 கோடியாக உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் தேர்தல் தேதி அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவ.13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நவ.20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட்டில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கலுக்கு அக்டோபர் 25ம் தேதியும், இரண்டாம் கட்டத்துக்கு அக்டோபர் 29ம் தேதியும் கடைசி நாளாகும்.
முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்போடர் 30ம் தேதியும் நடைபெறும். முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 30ம் தேதி கடைசி நாள். இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுககள் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 1. இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வயநாடு மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிப்பு
நவ. 13-ம் தேதி வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 30ம் தேதி. நவம்பர் 13ம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும். ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவ.20-ல் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.