×

பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் பாஜ எம்எல்ஏ முனிரத்னாவின் ஆதரவாளர்கள் 3 பேருக்கு ஜாமீன்

பெங்களூரு: பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் சட்டப்பேரவை தொகுதி பாஜ உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான முனிரத்னம் மீதான பாலியல் வழக்கில் சிறையில் உள்ள மூன்று பேரை ஜாமீனில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முனிரத்னத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று தெரியும். கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜ எம்எல்ஏவுமான முனிரத்னம் மீது பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியை சேர்ந்த சமூக சேவகி ஒருவர், தன்னை மிரட்டியும் பயமுறுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பின் எச்ஐவி பாதித்த பெண் ஒருவரை பயன்படுத்தி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டவரை ஹனிடிராப் செய்ததாக கூறியதுடன் முனிரத்னம் செய்த கொடுமைக்கு உதவியாக விஜயகுமார், மஞ்சுநாத், லோஹித், கிரண், லோகி ஆகியோர் இருந்ததாக தெரிவித்தார்.

புகார் மீது விசாரணை நடத்திய போலீசார், முனிரத்னம், விஜயகுமார், சுதாகர், மஞ்சுநாத், லோஹித்கவுடா, கிரண்குமார், லோகி ஆகிய 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 ஏ (பாலியல் வன்கொடுமை, 354 சி (பெண் விருப்பத்திற்கு மாறாக படம் பிடித்தது), 376 என் (2) ( அரசு சேவகராக இருந்து பாலியல் வன்கொடுமை), 506 (கொலை மிரட்டல்), 504 (திட்டமிட்டு துன்புறுத்தல்), 120 (பி) குற்றம் செய்ய சதி தீட்டல்), 149 சட்ட விரோதமாக கூட்டம்), 406 (நம்பிக்கை துரோகம்), 384 (வஞ்சணை), 308 (கொலை செய்ய முயற்சி), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66, 66 இ ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் முனிரத்னத்தை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இவ்வழக்கில் சிறையில் இருக்கும் மஞ்சுநாத், லோஹித், கிரண் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யகோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரணை நடத்திய நீதிபதி சந்தோஷ் கஜானனபட், நேற்று வழங்கிய தீர்ப்பில் மூன்று பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதே புகாரில் ஜாமீனில் விடுதலை செய்ய கோரி முனிரத்னம் தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதில் முனிரத்னம் ஜாமீனில் விடுதலையாவாரா? இல்லையா? என்பது தெரியும்.

The post பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் பாஜ எம்எல்ஏ முனிரத்னாவின் ஆதரவாளர்கள் 3 பேருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : BJP ,MLA ,Muniratna ,Bengaluru ,Rajarajeswarinagar Legislative Assembly Constituency ,Minister ,Muniratnam ,Munirathnam ,Karnataka ,Munirathna ,Dinakaran ,
× RELATED கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் என்னை...