×

விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமறைவானவரை தேடிப்போனவர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘தலைமறைவாக உள்ளவரை பொறுப்பாளராக நியமித்த பிறகு என்னாச்சு… வேட்பு மனு வாங்கினாங்களா…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் இலைக்கட்சிக்கான உள்கட்சித்தேர்தல் கடந்த மாதத்திலிருந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை இலைக்கட்சி தலைமை பொறுப்பாளர்களாக போட்டுள்ளது. கடலோர மாவட்டத்திற்கு தலைமறைவாக உள்ள மாஜி மில்க் மந்திரியை பொறுப்பாளராகப் போட்டிருந்தாங்க. தற்போது மோசடி வழக்குகளில் சிக்கி, தலைமறைவான நிலையில் அவரை போலீஸ் தேடி வர்றாங்க. மாற்றுப்பொறுப்பாளரை நியமித்து, மாவட்டத்தின் 13க்கும் அதிக ஒன்றியங்களிலும் இலைக்கட்சியின் கிளை, நகர், இணை, துணை, சார்பு அணிகள் என கட்சிப்பதவிகளுக்கு போட்டியிடும் நிலையில், மாவட்டத்தில் கட்சிக்காரர்கள் சிலர், ராமநாதபுரம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் முன்னாள் மில்க் மந்திரி தங்கி இருந்து இலை கட்சியினரிடம் வேட்புமனு வாங்குவதாக தகவல் பரவியது. காக்கிகளின் பிடியில் இருந்து தப்ப அவர் உள்ளூர் அல்லது வெளியூரில் இருக்கிறாரா என்று மாறி மாறி பதுங்கி தலைமறைவாகவே இருந்து வருகிறார். இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் சில இலை கட்சியினர் விருப்ப மனுவோடு விடுதி விடுதியாக ஏறி இறங்கினாங்களாம். யாரை கேட்டாலும் மாஜி மில்க் மந்திரி இங்கே இல்லையே. அப்படியே வந்தாலும் நாங்கள் எப்படி இடம் தருவோம். போலீஸ் எங்களையும் பிடித்து கொண்டு போய்விடாதா என்று இலை கட்சியினரை திருப்பி கேட்டாங்களாம்.. அதன் பிறகு தான் தாங்கள் ஏமாற்றபட்டது குறித்து தெரிந்து தலையில் அடித்து கொண்டார்களாம். கொண்டு போன விருப்ப மனுக்களையும் வேறு பொறுப்பாளரிடம் ஒப்படைத்தாங்களாம், இந்த காட்சிகளை கண்ட இலை கட்சி தொண்டர்கள், ‘‘ போலீசை சந்திக்க தைரியமில்லாமல் தப்பிச்சுப் போனவரு, எப்படி நேர்ல வருவார்னு கொஞ்சமும் யோசிக்காம போயிருக்காங்க’’ என கிண்டலடிக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ பாராட்டுவதில் ஓரவஞ்சனை செய்வதா என்று காக்கிகள் புலம்புவது எங்கே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூரில் பிரபல தனியார் நகைக்கடையில் சுவரை துளையிட்டு 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையனை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கடைசியில் உள்ளூரை சேர்ந்த கொள்ளையன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து முழுமையாக நகைகளை பறிமுதல் செய்தனர்.கொள்ளையனை 5 நாட்களில் பிடித்த போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் மத்தியில் இருந்தும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் தனிப்படையினருக்கு உதவிய காவலர்களுக்கு எந்தவிதமான பாராட்டும் கிடைக்கவில்லையாம். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் முதலில் இருந்து பணியாற்றியவர்களை கணக்கில் வைத்துக் கொள்ளாமல் கடைசியில் வந்தவர்களை மட்டும் கணக்கெடுத்து கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஷ்டப்பட்டவர்களுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் புலம்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாஜி மில்க் மந்திரியால் ஏன் விடுதி உரிமையாளர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கவர்மென்ட் வேலை வாங்கித்தருவதாக கோடிகளை அமுக்கிய இலைகட்சி மாஜி, ஓடி ஒளிந்து கொண்டிருப்பது ஊரறிந்த கதை. அவரால் மாங்கனி மண்டலத்தில் உள்ள சில மாஜிக்கள் தூக்கமின்றி தவிக்கிறாங்க. இந்த மண்டலம் பெங்களூருக்கு பக்கத்தில் இருக்குது. அதுமட்டுமல்லாமல் இங்குள்ள பல சொகுசு விடுதிகளையும், ரிசார்ட்டுகளையும் பினாமிகளின் பெயரில் மாஜிக்களே நடத்திக்கிட்டு வர்றாங்க. நியூ இயர் நேரத்தில் இங்கு பண மழை கொட்டுமாம். ஆனால் நடப்பாண்டு இதற்கு மாஜியின் தலைமறைவு வசூல் மழைக்கு ஸ்பீடு பிரேக் போட்டிருக்காம். தலைமறைவானவரு, சக மாஜிக்களின் சொகுசு விடுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் என்கொயரி அடிக்கடி நடக்குதாம். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான நியூஸ் பயர் போல் பரவுதாம். இதனால் வழக்கமான வாடிக்கையாளர்கள் விடுதிகளுக்கு வரத்தயங்குறாங்க. இது சொகுசு விடுதிகளின் சொந்தக்கார மாஜிக்களின் தூக்கத்தை கெடுத்திருக்காம். அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லீங்க. உள்ளூரில் தான் அவரு, எங்கேயாவது சுத்திகிட்டு இருப்பாரு. அதை கண்டுக்காம விட்டுட்டு எங்க விடுதிகளை துளைச்செடுக்கறீங்களே என்று நெருக்கமான காக்கிகளிடம் மாஜிக்கள் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுச்சேரியில் புதுசா ஏதாவது மேட்டர் இருந்தா சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘காரைக்கால் பகுதியை சேர்ந்த முருகன், புல்லட்சாமியின் தீவிர விசுவாசி, அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமரையின் அரசியல் சதுரங்கத்தால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. இதற்கு எந்த எதிர்வினையும் முருகன் தரப்பில் இருந்து உடனே வெளியாகவில்லை. மாறாக முருகனை விட ஜூனியரான சந்திரமானவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. பெண் என்ற அடிப்படையில் அமைச்சர் பதவி அலேக்காக தூக்கிவிட்டார். இதனால் தொகுதி பணிகளை மட்டுமே பார்த்து வரும், முருகன் அரசு விழாக்களை புறக்கணித்து வருகிறார். காரைக்கால் பகுதியில் புல்லட்சாமிக்காக அதிகம் உழைத்த முருகனை கண்டு கொள்ளாதால் அவரது தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர். இருப்பினும் தனக்காக யாரும் புல்லட்சாமியை விமர்சிக்ககூடாது என அன்பு கட்டளை போட்டிருக்கிறாராம். முருகனை மறந்துவிடாத சாமி, அவருக்கு கேபினட் அந்தஸ்தில் உள்ள பதவியை வழங்க முடிவு எடுத்திருக்கிறாராம். காரைக்கால் வளர்ச்சிக்குழு தலைவராக முருகனை நியமித்து அறிவிப்பு வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது. இந்த பதவியை கொடுத்து முருகனை குஷிப்படுத்த இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமறைவானவரை தேடிப்போனவர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Ennachu ,Peter ,Ramanathapuram district ,Lakakshi ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...