- முதல் அமைச்சர்
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- இந்து சமய அறநிலையத்துறை
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியன்
- தின மலர்
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ 68.36 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான கிருஷ்ணாபுரம், வெங்கடாஜலபதி திருக்கோயிலில் ரூ2.35 கோடி மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் ரூ1 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் ரூ96 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் ரூ 5.81 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
அதேபோன்று, மொத்தம் ரூ48.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள், ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், ரூ6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள், ரூ4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் என மொத்தம் ரூ68.36 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோன்று, திருச்செந்தூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்: ரூ68.36 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் appeared first on Dinakaran.