×

திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சு போட்டி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா நடக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலை­ஞரின் நூற்­றாண்டை, கொள்­கைத் திரு­வி­ழா­ வா­கக் கொண்­டா­டும் வகை­யில், திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயி­ரி­னும் மேலான..!’ என்ற பெயரில் பேச்­சுப் போட்டி மாநி­லம் தழு­விய போட்­டி­யாக நடை­பெற்று வருகிறது. சென்னை மண்­ட­லத்­துக்­கான போட்டி அன்­ப­கத்­தில் நடை­பெற்­றது. இந்த நிகழ்ச்­சி­யில் துணை முத­ல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்­து­ கொண்டு போட்­டி­யா­ளர்­களை வாழ்த்தி உரை­யாற்­றி­னார்.
அப்­போது அவர் பேசி­ய­தா­வது:

கலை­ஞரின் நூற்­றாண்டு விழா­வை­யொட்டி, நம் முத­ல்வர் இளை­ஞர் அணிக்கு மூன்று பொறுப்­பு­கள் கொடுத்தார். அதில் மிக­மிக முக்­கி­ய­மான பொறுப்­பு­தான் இந்­தப் பேச்­சுப்­போட்டி. தேர்­தல் நேரம், மற்ற பணி­க­ளால் போட்­டியை நடத்தி முடிக்க கொஞ்­சம் தாம­த­மா­கி­விட்­டது. இருந்­தா­லும், இவ்­வ­ளவு பெரிய வரவேற்பு கிடைக்­கும் என்று, நாங்­கள் எதிர்­பார்க்­கவே இல்லை. கிட்­டத்­தட்ட 17 ஆயி­ரம் பேர் தமிழ்­நாடு முழுக்க விண்­ணப்­பித்­தார்­கள். ஏதோ இரண்டு நாள், ஒரு வாரத்­தில் முடித்து விடா­மல், முதல் சுற்­றில் தேர்வானவர்களுக்கு பயிற்சி கொடுத்து, ஒவ்­வொரு 20 பேருக்­கும் ஒரு பயிற்­சி­யா­ளரை நிய­மித்து பயிற்சி அளிக்­கப்­பட்­டது.

முதல் பரிசு ரூ.1 லட்­சம், இரண்­டா­வது பரிசு ரூ.75 ஆயி­ரம், மூன்­றாம் பரிசு ரூ.50 ஆயி­ரம் என அறி­வித்­தோம். கலந்­து­கொண்ட அனை­வ­ருக்­கும் அதா­வது 17 ஆயி­ரம் பேருக்­கும் பரிசு கொடுக்க எனக்கு ஆசை­தான். இருந்தாலும், பரிசு கொடுக்க முடி­யாது. தமிழ்­நாட்­டின் நிதி நிலைமை எப்­படி இருக்­கி­றதோ அதே­போல்­தான் இளை­ஞர் அணி நிதி நிலை­மை­யும் இருக்­கி­றது. அத­னால், அடுத்த முறை இந்­தப் பரி­சுத்­தொகை இன்­னும் அதி­கப்­ப­டுத்­தப்­ப­டும். உங்­க­ளின் ஆர்­வம் எங்­களை எல்­லாம் மகிழ்ச்சி அடைய வைத்­தி­ருக்­கி­றது. ஒரு மிகப்பெரிய நம்­பிக்கை ஏற்­பட்டு இருக்­கி­றது. சில பேர் பேசும்­போது கொஞ்­சம் தயங்­கி­னீர்­கள், நானும் அதைப்­போ­லத்­தான். எனக்கு மைக் கொடுத்து மக்­க­ளி­டம் பேசச் சொன்­னீர்­கள் என்­றால், ஜாலி­யாக சரளமாக பேசிவிடுவேன். எனக்கு எதுகை, மோனை­யு­டன் எல்­லாம் பேசத் தெரி­யாது.

இப்­போது கடை­சி­யாக ஒரு தம்பி பேசி­னார், அது மாதிரி எல்­லாம் என்­னால் பேசவே முடி­யாது. சுட்­டுப்­போட்­டா­லும் எனக்கு வராது. நானெல்­லாம் மன­துக்கு தோன்­று­வதை மன­தில் இருப்­ப­தைப் பேசு­வேன். உண்­மை­யைப் பேசு­வேன். திமுகவின் கொள்கையை பேசு­வேன். நம் முத­ல்வரின் திட்­டங்­க­ளைப் பற்றி பேசு­வேன். இன்­னும் சொல்­லப்­போ­னால், கலை­ஞர் முன் பேச எனக்கு இரண்டு, மூன்று வாய்ப்­பு­கள் கிடைத்து இருக்­கி­றது. 10, 12 வரு­டத்­திற்கு முன்பு, ஒரு திரு­மண நிகழ்ச்­சி­யில் வர­வேற்­புரை ஆற்­றும் வாய்ப்பு கிடைத்­தது. பேசும்­போது வியர்த்­துக் கொட்­டி­யது. இப்­போ­தும் கூட முத­ல்வரின் முன்பு பேசு­வ­தற்­குப் பயப்­ப­டு­வேன். எப்­போது பேச்சை முடித்­து­விட்டு, போவோம் என்று இருக்­கும். இங்கு வந்து பங்­கேற்று இருக்­கின்ற அனை­வ­ரும் வெற்­றிப் பெற்­ற­வர்­கள்­தான். உங்­கள் அனை­வ­ருக்­கும் என் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

திமுகவின் எதிர்­கா­லமே நீங்­கள்­தான். உங்­க­ளைச் சந்­தித்­த­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். திமுக பேசி, எழுதி, படித்து வளர்ந்த இயக்­கம். அந்­தத் தொடர்பை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில்­ தான் இது போன்ற போட்­டி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. வரு­கின்ற 19ம் தேதி இந்­தப் போட்­டிக்­கான இறு­திப்­ போட்­டி­யும், 20ம் தேதி முத­ல்வர் மு.க.ஸ்டாலின் கைக­ளால் முதல் மூன்று இடங்­க­ளைப் பிடிக்­கும் பேச்­சா­ளர்­க­ளுக்­கான பரி­சும் வழங்­கப்­பட இருக்­கி­றது. எனவே, உங்­களை எல்லாம் மீண்­டும் இறு­திப்­போட்­டி­யில் அண்ணா அறிவாலயம் கலை­ஞர் அரங்­கில் சந்­திக்­கி­றேன். இவ்­வாறு அவர் பேசினார்.

The post திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சு போட்டி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka Youth Team ,Principal ,Mu. K. ,Stalin ,Deputy Chief Assistant Secretary ,Chennai ,K. ,M. K. ,Dinakaran ,
× RELATED கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து...