×

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து உயிரிழப்பை தடுக்க ரூ.60 கோடியில் தரம் உயர்த்தப்படும் திண்டிவனம் அரசு மருத்துவமனை

திண்டிவனம்: நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.60 கோடியில் நவீன வசதிகளுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனை தயாராகி வருகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருவண்ணாமலை நெடுஞ்சாலை பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற சென்னை அல்லது செங்கல்பட்டு, புதுச்சேரி, முண்ணியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. அதோடு இப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் நவீன மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற அரசு மருத்துவமனைகளைத்தான் நாட வேண்டியிருக்கிறது. எனவே விபத்தில் சிக்குபவர்களுக்கும், கிராம மக்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வசதியாக அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையை ரூ.60 கோடியில் தரம் உயர்த்த இரண்டு வகையான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக குறுகிய இடத்தில் போதிய இட வசதியின்றி இயங்கிய நிலையில், மாவட்ட மருத்துவமனையாக இதை தரம் உயர்த்தி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை கடந்த 2023 அக்டோபர் 28ம்தேதி, பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு பணிகள் துவங்கியது. இப்புதிய கட்டிடத்தின் மூலம், 400 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மகப்பேறு மருத்துவ பிரிவிற்காக பிரத்யேகமாக தரை தளத்துடன் சேர்ந்த 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது 4 தளங்கள் கொண்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுதீ தடுப்புக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றது. மேலும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் வழித்தடங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற டிசம்பர் மாதம் பணிகள் முடிந்து மகப்பேறு கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் அவசர சிகிச்சைக்கான தரைதளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடப் பணிகள் நான்கு தளம் வரை முடிவுற்ற நிலையில் இன்னும் சில மாதங்களில் முழுவதுமாக முடிவுற்று இதன் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனை பல்நோக்கு புதிய 5 மாடி கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* என்னென்ன வசதிகள்
5 மாடிகளாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில், தரைதளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, விபத்து பிரிவு, காவலர் விசாரணை அறை, மருத்துவர்கள் அறை, நவீன சிடி ஸ்கேன், ரத்த சுத்திகரிப்பு, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், முதல் தளத்தில் சிகிச்சை அறை, மருத்துவ கருவிகள் அறை, குழந்தைகள் சிகிச்சை பிரிவு போன்றவைகளும், 2ம் தளத்தில் பரிசோதனை அறை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, 3ம் தளத்தில் அறுவை சிகிச்சை வார்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டும், 4ம் தளத்தில் நோயாளிகள் கண்காணிப்பு அறை, கருத்தடை மற்றும் சுத்தம் செய்யும் அறை, 5 அறுவை சிகிச்சை தியேட்டர்கள் ஆகியவை இடம்பெற உள்ளன. 5ம் தளத்தில் எம்ஆர்டி அறை, தீப்புண் சிகிச்சை பிரிவு போன்றவைகளும் அமைக்கப்படுகிறது.

The post சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து உயிரிழப்பை தடுக்க ரூ.60 கோடியில் தரம் உயர்த்தப்படும் திண்டிவனம் அரசு மருத்துவமனை appeared first on Dinakaran.

Tags : Tindivanam Government Hospital ,Chennai-Trichy highway ,Dindivanam ,Dindivanam Government Hospital ,Chennai-Trichy National Highway ,Chennai- ,Tiruvannamalai Highway ,Dinakaran ,
× RELATED பாமகவில் தந்தை-மகன் மோதல் முற்றுகிறது;...