×

அரசு மற்றும் பழங்குடியின பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சுற்றுலா கூட்டிச்செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

ஊட்டி: அரசு மற்றும் பழங்குடியின பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சுற்றுலா கூட்டிச்செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான மாவட்ட அளிவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மற்றும் பழங்குடியின பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊட்டியில் உள்ள வானொலி நிலையம், நஞ்சநாடு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை பண்ணை, அணைக்கட்டுகள், மருத்துவக்கல்லூரி, மாவட்ட கலெக்டர் ர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்.

பள்ளிக்குழந்தைகளுக்கு வட்டார அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை ஊட்டியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் வைத்து காட்சிபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக கூடலூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டும். சிறந்த பெண் குழந்தை நிகழ்ச்சி , குழந்தை திருமணம், இள வயது கர்ப்பம், மருத்துவ முகாம் மற்றும் தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக பள்ளி இடை, நிற்றல் குழந்தைகள், பழங்குடியின மக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியை அடையாளம் கண்டு அப்பகுதியில் திறன் பயிற்சி வழங்க வேண்டும்.  மேலும், மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் ஒரே நாளில் மாரத்தான் ஓட்டம் நடத்த திட்டமிட வேண்டும். மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பாக, ஊராட்சி அளவில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அமைத்திட வேண்டும் எனவும், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான அனைத்து பணிகளையும் பல்வேறு துறை அலுவலர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் மூலமாக இத்திட்டம் தொடர்பான செய்திகனள பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) நத்தகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த் டி.காலகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) தீபா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தேவகுமாரி, கல்லூரி முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு மற்றும் பழங்குடியின பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சுற்றுலா கூட்டிச்செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Girl Child ,
× RELATED ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில்...