×

பொது இடங்களில் வீதிமீறி குப்பை கொட்டினால் ‘ஸ்பாட் பைன்’ விதிக்க பிரத்யேக கருவி: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகளை விதிகளை மீறி பொது இடங்களில் கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு ஸ்பாட் பைன் முறையில் அபராதம் வசூலிக்க பிரத்யேக கருவி மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமீறி பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவோர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.500ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 ஆகவும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சிச் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000, கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் முறையாக குப்பைத் தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

பொது நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் 12 மணி நேரத்துக்குள் தூய்மைப்படுத்தப்படாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களது வீடுகள், கடைகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். கட்டுமான கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி ஊழியர்களால் அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது. சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அதை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்க டிஜிட்டல் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக ஆன் ஸ்பாட் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கருவி போன்ற புதிய டிஜிட்டல் கருவியை வாங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்கட்டமாக 500 கருவிகளை சோதனை அடிப்படையில் வாங்கவும், பின்னர் இந்த முறையை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருவிகள் அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களை ரோந்து பணியில் ஈடுபட மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், யார் யார் விதிகளை மீறி செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு உடனடியாக அபராத்தை விதிக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, குப்பை தரம் பிரிக்காமல் இருந்தால் அதற்கு ரூ.1000 சட்டவிரோத கழிவு நீர் வெளியேற்றம் அதற்கு ரூ.25,000, கால்நடைகள் சுற்றிதிரிந்தால் அதற்கு ரூ,10000 என முடிவு செய்யப்பட்டுள்ளது.

1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவது மற்றும் கழிவுநீர்/ கசடுகளை நீர்நிலைகளில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்கள் 1913 என்ற உதவி எண்ணில் புகார் அளிப்பதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும், என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

The post பொது இடங்களில் வீதிமீறி குப்பை கொட்டினால் ‘ஸ்பாட் பைன்’ விதிக்க பிரத்யேக கருவி: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipality ,Dinakaran ,
× RELATED வடகிழக்குப் பருவமழை முன்னெச்செரிக்கை...