×
Saravana Stores

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: நாடு முழுவதும் இரங்கல்

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், KLIVE 2012-ல் ஓய்வு பெற்றார். 1996-ல் டாடா டெலி சர்வீஸ் என்ற நிறுவனத்தை ரத்தன் டாடா முதன்முதலில் நிறுவினார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா.

கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளுக்காக ரூ.1,500 கோடி வழங்கினார் ரத்தன் டாடா. 1937-ல் மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, தனது 10 வயதில் இருந்து பாட்டியிடம் வளர்ந்தார். 1959-ல் அமெரிக்காவில் கட்டடக் கலை படிப்பை முடித்துவிட்டு, டாடா குழுமத்தில் பணியாற்றத் தொடங்கினார். படிப்படியாக அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு முன்னேறி, 1991-ல் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவரானார். 21 ஆண்டு தலைமையில், நிறுவனத்தின் வருவாயை 40 -மடங்குகளும், லாபத்தை 50 மடங்குகளும் பெருக்கினார்.

1998-ல் டாடா இண்டிகா தொடங்கி, ரூ.1 லட்சத்திற்கு நானோ கார், ஜாகுவார் லேண்ட் ரோவர் வரை முக்கியப் பங்கு உள்ளது. 2012-ல் 75 வயதில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா; 2016-17-ல் இடைக்காலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவராக, இறுதி மூச்சு வரை ஆலோசனைகள் வழங்கினார். பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளை ரத்தன் டாடாவுக்கு வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது.

ரத்தன் டாடா மறைவிற்கு தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள N.C.P.A.மையத்தில் பொதுமக்களின் – அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது

குடியரசுத் தலைவர் இரங்கல்
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்; ரத்தன் டாடா அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ரத்தன் டாடா ஆற்றிய தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. ரத்தன் டாடா குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்
தொலைநோக்கு வணிகத் தலைவரான ரத்தன் டாடா அசாதாரண மனிதர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் பழமையான மதிப்புமிக்க நிறுவனத்திற்கு நிலையான தலைமையை வழங்கியவர் ரத்தன் டாடா. பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர் ரத்தன் டாடா என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ரத்தன் டாடா மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறையில் கலங்கரை விளக்கம் போல் உயர்ந்து விளங்கியவர் ரத்தன் டாடா. இந்திய தொழில்துறையின் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. ரத்தன் டாடா குடும்பத்தினர், டாடா குழும ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல்காந்தி இரங்கல்
ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டினார். ரத்தன் டாடா வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளார். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்கே இரங்கல்
ரத்தன் டாடா மறைவு இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் ரத்தன் டாடா செயலாற்றினார். கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் இருந்தார் ரத்தன் டாடா. தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை ரத்தன் டாடா வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் இரங்கல்
இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி உள்ளார். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என ரத்தன் டாடா மறைவுக்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
ரத்தன் டாடா மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேசத்துக்கும், மக்களுக்கும் ரத்தன் டாடாவின் பங்களிப்புகள் அளவிடமுடியாதது. சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: நாடு முழுவதும் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ratan Tata ,Mumbai ,Tata Sons Group ,TATA GROUP ,KLIVE ,
× RELATED அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ரத்தன் டாடா...