×

இன்னிங்ஸ், 120 ரன் வித்தியாசத்தில் வெற்றி தொடரை கைப்பற்றியது இந்தியா யு-19: ஆஸி.யை ‘ஒயிட்வாஷ்’ செய்து அசத்தல்

சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணியுடன் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 120 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா யு-19 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 492 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

நித்ய பாண்டியா 94, கார்த்திகேயா 71, கேப்டன் பட்வர்தர் 63, நிகில் குமார் 61, ஹர்வன்ஷ் பங்காலியா 117 ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா யு-19 அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்திருந்தது. ஆலிவர் பீகே 62 ரன், அலெக்ஸ் லீ யங் 45 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 166 ரன் சேர்த்தது. லீ யங் 66 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கிறிஸ்டியன் ஹோவ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சதம் விளாசிய கேப்டன் ஆலிவர் பீகே 117 ரன் (199 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அன்மோல்ஜீத் சிங் பந்துவீச்சில் குமார் வசம் பிடிபட்டார்.

எய்டன் ஓ கானார் 18, ஓல்லி பேட்டர்சன் 12, லாக்லன் ரனால்டோ 2, விஷ்வா ராம்குமார் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 277 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (80.2 ஓவர்). ஹாரி ஹோக்ஸ்ட்ரா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா யு-19 பந்துவீச்சில் முகமது எனான், அன்மோல்ஜீத் சிங் தலா 4, சமர் நாகராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 215 ரன் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 95 ரன்னில் சுருண்டது (31.3 ஓவர்). சைமன் பட்ஜ் 26, ஸ்டீவன் ஹோகன் 29 ரன் எடுக்க, சக வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (4 பேர் டக் அவுட்). ஹாரி ஹோக்ஸ்ட்ரா 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா யு-19 பந்துவீச்சில் அன்மோல்ஜீத் சிங் 5, முகமது எனான் 3, சேத்தன் ஷர்மா 1 விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 120 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா யு-19 அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. முதல் இன்னிங்சில் 4, 2வது இன்னிங்சில் 5 என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்திய அன்மோல்ஜீத் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post இன்னிங்ஸ், 120 ரன் வித்தியாசத்தில் வெற்றி தொடரை கைப்பற்றியது இந்தியா யு-19: ஆஸி.யை ‘ஒயிட்வாஷ்’ செய்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,U-19 ,Whitewash ,Aussies ,CHENNAI ,India U-19 ,Australia U-19 ,MA Chidambaram Stadium ,Chepakkam ,Whitewashed ,Dinakaran ,
× RELATED பாடி ஸ்ட்ராங்கு… பேஸ்மென்ட் வீக்கு… 128...