நன்றி குங்குமம் டாக்டர்
இன்றைய இளம் பெண்கள் பலரிடமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அது தங்களுக்கு அழகான தோற்றத்தைத் தருவதாக நினைக்கிறார்கள். ஆனால், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது, எந்த அளவுக்கு முடிக்கு ஆரோக்கியம் என்பது கேள்விக்குறிதான். அதே சமயம், இது எல்லோருக்குமே பக்க விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லை. எனவே, ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்வதினால் ஏற்படும் நன்மை தீமைகளைத் தெரிந்து கொள்வோம்.
எந்த வகையான முடியாக இருந்தாலும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யும்போது, வளைவுகள் இல்லாமல் நூல் பிடித்தாற்போல் நேராக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இந்த ரசாயனமும், அதிக வெப்பமும் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
மேலும், முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடியில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து வறண்ட தன்மையை கொடுக்கும். எனவே, அடிக்கடி ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்பவர்களுக்கு, நாளடைவில் சிலருக்கு முடி ஜீவனின்றி பொலிவிழந்து காணப்படும். பொதுவாக, முடி உறுதியாக இருக்க இயற்கையாகவே அதில் ஹைட்ரஜன் இணைப்பு இருக்கும். அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சிலருக்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம். அதுபோன்று, வெயிலில் நடந்தாலோ, குளிர்ந்த நீரில் குளித்தாலோ, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.
ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப்பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்று போகலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே, ஹேர்ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கு முன்பு அந்த ரசாயன கிரீம் கூந்தலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுத்துமா என்பதை சோதனை செய்துகொண்ட பிறகு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்வது நல்லது.
ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் மெஷின் முடியை நேராக்க பயன்படுகிறது. இன்றைய தலைமுறையினர் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த மெஷினில் உருவாகும் வெப்பம் முடியை நேராக்குகிறது. இருப்பினும், இது முடியை மிகவும் பாதிக்கிறது என்பதே உண்மை. தலைமுடி சிறிது நேரத்திற்குள் வறண்டு போகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் நினைத்தால் இந்த பிரச்சனையை குறைக்கலாம். நீங்கள் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் மூலம் முடியை நேராக்குவதற்கு முன் சிலவற்றை முடியில் தடவ வேண்டும். இது முடி உதிர்தலை தடுக்கும்.
ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை
*ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு முன்பு முடியில் சீரம் தடவ வேண்டும். சீரம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதனால் இதை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
*முதலில் தலைமுடியை சீராக வாரிக் கொள்ள வேண்டும்.
*இப்போது கையில் சில துளி சீரம் சொட்டுகளை எடுத்து அதனை தலைமுடி முழுவதும் தடவ வேண்டும்.
*இதை செய்த பின்பு தலைமுடியை ஸ்ட்ரைட்டனிங் மெஷின் மூலம் ஸ்ட்ரைட்டனிங் செய்ய வேண்டும்.
*இவ்வாறு செய்வதால் உங்கள் முடி வெப்ப பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.
தலைமுடியில் சீரம் தடவுவததால் ஏற்படும் நன்மைகள்
*பொலிவு இல்லாத கூந்தலுக்கு பளபளப்பைக் கொண்டுவர ஹேர் சீரம் பயன்படுகிறது.
*தலைமுடி அதிகமாக உதிர்ந்தால் சீரம் பயன்படுத்தலாம்.
*சீரம் தடவிய பின் தலைமுடியில் சிக்கு ஏற்படாது.
*முடியின் இயற்கைத் தோற்றத்தை மேம்படுத்தவும் ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லின் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம். இது சருமம் முதல் முடி வரை அனைத்து பிரச்னைகளை குறைக்கவும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லின் உதவியுடன் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால் அதிக சேதத்திலிருந்து தலைமுடியை பாதுகாக்கலாம்.
செய்ய வேண்டியவை
ஃப்ரஷான கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டும். சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து தலைமுடியில் தடவிய பின்பு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யலாம். இதனால் வெப்பம் அதிகளவு முடியை தாக்காது.
இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்
ஸ்ட்ரெயிட்டனிங் மெஷின் மூலம் முடியை நேராக்குவதற்கு பதிலாக, இயற்கையான முறையில் முடியை நேராக்க முயற்சி செய்யுங்கள். இதற்கு நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்களை பயன்படுத்தலாம். முடி சேதமடைவதை தடுக்க முடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். எண்ணெய், ஷாம்பு மற்றும் ஹேர் மாஸ்க் ஆகியவை இதில் அடங்கும்.
தொகுப்பு: ரிஷி
The post ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யலாமா! appeared first on Dinakaran.