×

இப்போதும் நாங்கள் எதிரி தான் 15 மாதத்தில் எதுவும் நடக்கலாம்: பாஜ கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் சூசகம்

திண்டுக்கல்: ‘பாஜவிற்கு நாங்கள் இப்போதும் எதிரி தான். அதேசமயம், 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என பாஜ கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. 2026 தேர்தலை சந்திக்க பதினாறு அமாவாசை இருக்கிறது. அனைத்து கட்சியும் கூட்டணியுடன் தான் போட்டியிடுகிறது. கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயக கடமை. அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும்’’ என்று ெதரிவித்தார்.

பாஜ உடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘ஜோசியம் சொல்ல முடியாது. சூழ்நிலையைப் பொறுத்து, தேர்தல் வரும் போதுதான் அதுகுறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. பாஜவிற்கு நாங்கள் இப்போதும் எதிரி தான். 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து சந்திப்போம்’’ என்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என திட்டவட்டமாகக் கூறி வரும் நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post இப்போதும் நாங்கள் எதிரி தான் 15 மாதத்தில் எதுவும் நடக்கலாம்: பாஜ கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் சூசகம் appeared first on Dinakaran.

Tags : Dindigul Srinivasan ,BJP alliance ,Dindigul ,BJP ,AIADMK West District ,Dindigul Manikundu ,Dindigul Srinivasan Susakam ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை