திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில், கார்த்தி அங்குள்ள கோவில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது. இதில், கார்த்தி என்பவரது வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 மாத குழந்தை, பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த குமார் என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கார்த்தி என்பவரது வீடு சேதம் அடைந்ததுடன், அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளன. சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு நடத்தியநிலையில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.