×

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக மெரினா கடற்கரை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு ஒன்று கூடி புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அதுபோல அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளிலும் மது விருந்துகள் மற்றும் கச்சேரிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெறும்.ஆனால், கொரோனா பெரும் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் பெரிய வரவேற்பு இல்லாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. அதேநேரம் மெரினா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளின் பக்கம் திரும்பி உள்ளனர்.ஒமிக்ரான் பரவலும் தற்போது அதிகரித்து வருகிறது. இது கொரோனா தொற்றை விட இரண்டு மடங்கு அதிவேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லி மற்றும் கேரளா, கர்நாடகாவில் ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து நேற்று முதல் நள்ளிரவில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் நள்ளிரவு ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இதனால் இந்த ஆண்டு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக முதல்வருக்கு பல்வேறு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதேநேரம் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மற்றும் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்று தெரியவந்துள்ளது. அப்படி சிறப்பு வழிபாடு மற்றும் தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் தமிழக அரசு வெளியிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தேவாலய நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கம் போல் புத்தாண்டு அன்று சென்னையில் உள்ள அண்ணாசாலை உட்பட முக்கிய சாலைகள் 400க்கும் மேற்பட்ட மேம்பாலங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடையை மீறி யாரேனும் பொது இடங்களில் கொண்டாட்டங்கள் மற்றும் சாலைகளில் பைக் ரேஸ்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பது குறித்தும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் பொது இடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், கிளப்புகள் மற்றும் அனைத்து கேளிக்கை விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது….

The post ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Year ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,New Year ,Tamil Nadu ,Marina Beach… ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...