பெரம்பூர்: சென்னையில் எப்போதும் சவாலாக இருக்கும் பணிகளில் கழிவுநீரகற்று பணியும் ஒன்று. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களிலும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். குறிப்பாக, கொரோனா காலகட்டம் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளில் சாலைகளில் தேங்கும் கழிவுநீரை அகற்றும் பணி மற்றும் வீடுகளில் கழிவுநீர் அடைத்துக்கொண்டால் அதனை அகற்றும் பணிகளில் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒரு காலகட்டத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் அதனை மனிதர்கள்தான் இறங்கி சரி செய்தனர். அந்த நிலை படிப்படியாக மாறி, தற்போது நவீன இயந்திரங்களை கொண்டு கால்வாய் அடைப்பு சுத்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஜெட் ரோடு இயந்திரங்கள் மற்றும் அடைப்பை துல்லியமாக படம்பிடித்து காட்டும் நவீன இயந்திரங்கள் என பல தொழில்நுட்பங்கள் வந்தபிறகு ஓரளவிற்கு கழிவுநீர் அகற்றும் பணியில் உள்ளவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலேயே முதன்முறையாக மொபைல் செயலி மூலம் கழிவுநீர் உந்து நிலையத்தை இயக்கும் செயல் திட்டமும், கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவை தடுக்கும் தொழில்நுட்பமும் கொளத்தூரில் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னை போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் குறிப்பிட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர், உந்து நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஒரு நாளைக்கு 3 முறை என ஷிப்ட் அடிப்படையில் இந்த கழிவுநீர் உந்துநிலையங்களை இயக்கி, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். இந்த கழிவுநீர் உந்து நிலையங்களை இயக்கும்போது ஒவ்வொரு ஷிப்ட் முறையிலும் 3 பேர் என 9 பேர் ஈடுபடுத்தப்படுவர். மேனுவல் முறையில் இந்த உந்து நிலையங்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகர் பகுதியில் சுமார் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மொபைல் செயலி மூலம் இயங்கும் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு அது தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட உந்து நிலையத்தில் மனிதர்கள் யாரும் இல்லாமல் வெளியில் இருந்து தங்களது செல்போன்களை பார்த்தபடி எவ்வளவு தண்ணீர் ஏறி உள்ளது, எப்போது மோட்டாரை இயக்க வேண்டும் என்பதை மொபைல் செயலி மூலமே இயக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரணமாக கழிவுநீர் உந்து நிலையங்களை மனிதர்கள் இருக்கும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் கழிவுநீர் உந்து நிலையங்களை முறையாக இயக்காவிடில் தெருக்களில் குறிப்பாக தாழ்வான உள்ள பகுதிகளில் இருக்கும் மேன்ஹோல்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும். சில நேரங்களில் கழிவுநீர் உந்து நிலையங்களில் வேலை செய்பவர்கள் தூங்கிவிட்டாலோ அல்லது பணிக்கு வரவில்லை என்றாலோ இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது மொபைல் செயலி மூலம் இயங்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட பகுதி இன்ஜினியர் மற்றும் அவருக்கு மேல் பொறுப்பில் உள்ளவர்கள் என 5க்கும் மேற்பட்டோர் கூட அந்த செயலியை தங்களது செல்போனிலேயே பயன்படுத்த முடியும். இதற்காக பாஸ்வேர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிகாட்டி செய்முறைகள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு கழிவுநீர் உந்து நிலையத்திற்கு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுநீர் பெறப்பட்டு அது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும்போது ஒருவித கடும் துர்நாற்றம் அப்பகுதியில் ஏற்படும். ஒவ்வொரு முறையும் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டாரை ஓட விடும்போது அந்தப் பகுதியை சுற்றி கடும் துர்நாற்றம் வீசும். இனால், பலர் கழிவுநீர் உந்து நிலையம் உள்ள வீடுகளில் குடியேற மாட்டார்கள்.
ஆனால் குறிப்பிட்ட கொளத்தூர் வீனஸ் நகர் கழிவுநீர் உந்து நிலையத்தில் முதல்முறையாக கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு ஆக்டிவேட் கார்பன் மூலம் அந்த நச்சு வாயு சுத்திகரிக்கப்பட்டு அது நல்ல காற்றாக மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு நைட்ரஜன் சல்பைடு போன்ற கெட்ட வாயுக்கள், கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும்போது வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டு ஆக்டிவேட் கார்பன் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத்தின் மூலம் நச்சு கலந்த துர்நாற்றம் மிக்க வாயு நல்ல ஆக்ஸிஜனாக மாற்றப்படுகிறது. பொதுவாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின்படி கழிவுநீர் உந்து நிலையங்களில் காற்றின் நச்சு 10 பிபி அளவிற்கு இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொளத்தூர் வீனஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலையத்தில் நச்சுவாயின் அளவு ஜீரோ பிபி என்ற விகிதத்தில் காற்றில் எந்தவித நச்சு வாயுவும் கலக்காத வகையில் தொழில்நுட்ப வசதியோடு இந்த செயல்முறை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்திலேயே முதன்முறையாக கொளத்தூர் வீனஸ் நகரில் கழிவுநீர் உந்து நிலையங்களை இயக்க செயலி அறிமுகம்: நச்சு வாயுவை தடுக்க நவீன தொழில் நுட்பம் appeared first on Dinakaran.