×

பரணிபுத்தூர் பள்ளி நுழைவு வாயில் முன்பு கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளம்: மாணவர்கள் கடும் அவதி

குன்றத்தூர்: மாங்காடு அருகே அரசு பள்ளியின் நுழைவு வாயிலில் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், மாணவ – மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் அரசுக்கு சொந்தமான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், காலாண்டு விடுமுறைக்குபின் நேற்று பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளியின் உள்ளே மாணவர்கள் செல்ல முடியாதவாறு வாசலில் பெரிய கால்வாய் தோண்டப்பட்டு இருந்தது. அதில், ஆபத்தானநிலையில் கம்பிகள் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு இருந்தது. விசாரணையில், மவுலிவாக்கம் முதல் மாங்காடு வரையிலான மழைநீர் கால்வாய் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தோண்டப்பட்ட பள்ளம் என்பது தெரியவந்தது.

கடந்த சனிக்கிழமை கால்வாய் அமைப்பதற்காக பள்ளியின் முன்பாக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், கால்வாய் பணி முழுமையாக நிறைவடையாமல் தற்போது வரை திறந்த நிலையில் உள்ளது. அத்துடன் ஆங்காங்கே கூர்மையான கம்பிகள் வெளியே தெரியும் வகையில் நீட்டிக்கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். கடந்த, ஒரு வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையில் அப்பொழுதெல்லாம் இப்பணிகளை முடிக்காமல் பள்ளி திறந்த நிலையிலும் பணிகளை தொடர்வது கண்டிக்கத்தக்கது என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள் குறைகூறி வருகின்றனர்.

The post பரணிபுத்தூர் பள்ளி நுழைவு வாயில் முன்பு கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளம்: மாணவர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Baraniputhur ,Kunradthur ,Mangadu ,Baraniputtur ,Baraniputhur school ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி