துபாய்: 10 அணிகள் பங்கேற்றுள்ள 9வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா நேற்றிரவு தனது முதல் போட்டியில் நியூசிலாந்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சோஃபி டெவின் 36 பந்தில் 7 பவுண்டரியுடன் 57 ரன் விளாசினார்.பின்னர் களம் இறங்கிய இந்திய மகளிர் அணியில் ஷபாலி வர்மா 2, மந்தனா 12, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13, ரிச்சா கோஷ் 12, தீப்தி சர்மா 13 ரன்னில் அவுட் ஆகினர். 19 ஓவரில் இந்தியா 102 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
நேற்று தோல்வி குறித்து கேப்டன் கவுர் கூறியதாவது: நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கினோம், ஆனால் அந்த வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர். பீல்டிங்கில் சில தவறுகளை செய்தோம். 160 ரன்னை சேசிங் செய்யும் நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்த தோல்வியை மறந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவேண்டும், என்றார். இன்று மாலை 3.30 மணிக்கு பி பிரிவில் ஆஸ்திரேலியா-இலங்கை, இரவு 7.30 மணிக்கு ஏ பிரிவில் வங்கதேசம்-இங்கிலாந்து மோதுகின்றன.
அரையிறுதி வாய்ப்பு சிக்கல்?
முதல் போட்டியில் தோல்வியால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகி உள்ளது. அடுத்ததாக வரும் 6ம் தேதி பாகிஸ்தான், 9ம் தேதி இலங்கை மற்றும் 13ம் தேதி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இந்த 3 போட்டியிலும் வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். அதிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
The post நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி appeared first on Dinakaran.