சிறப்பு செய்தி
இயந்திர மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என்று மனிதர்களால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும் தொடர்கிறது. இப்படி மனிதர்களால் அழிக்கப்படும் விலங்கினங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், வனப்பரப்பின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பவை. இவற்றை அழிப்பதால் எதிர்காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை மனிதகுலம் சந்திக்க நேரிடும் என்று சூழலியல் மேம்பாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
வனவிலங்குகளை நாம் உற்பத்தி செய்ய முடியாது. ஒரு முறை அது மறைந்துவிட்டால், அந்த இடத்தை நாம் நிரப்ப முடியாது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தரவுகளின் படி உலகளவில் 8,400 வகையான காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. சில அரிய விலங்கினங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கோவை, உதகமண்டலம், நெல்லை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் புலிகள், யானைகள், மான்கள் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக மனிதர்களின் அத்துமீறல்களால் இறப்பை தழுவி வருகிறது. இந்தவகையில் அழிந்து வரும் வனவிலங்குகளை காப்பதற்காகவும், இயற்ைக சமநிலை மாறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 4ம் ேததி, உலக வனவிலங்குகள் நலதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தவகையில் நேற்று (4ம்தேதி) உலக வனவிலங்கு நலதினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சேலம் மண்டல வனஉயிரியல் ஆர்வலர்கள் கூறியதாவது: நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களில் 40 சதவீதமும், பாலூட்டிகளில் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், பவளப்பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விழிம்பில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது மொத்த வனவிலங்குகளின் எண்ணிக்கையில் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயற்கையின் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் பாறு கழுகுவகைகள் உலகளவில் 99 சதவீதம் அழிந்துவிட்டது. இதை நமது தமிழ்நாட்டில் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைத்து வருகிறோம்.
அதேபோல், இந்திய அளவில் புலிகள், சிறுத்தைகள், நரிகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் உள்ளது. மாநில விலங்கான நீலகிரி வரையாடு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கிறது. இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியலை சிறப்பாக மாற்றுகிறது. மண்செழிப்பதற்கு மழை வேண்டும்.
அந்த மழை பொய்க்காமல் இருப்பதற்கு காடுகள் வேண்டும். மழை பொய்க்காமல் இருந்தால் தான், மனித குலத்திற்கான உணவு தானியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். எனவே, மழைக்கு வழிவகுக்கும் காடுகள் உயிர்ப்புடன் இருக்க வனவிலங்குகள் கண்டிப்பாக வேண்டும். இதை மட்டும் மனிதர்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
வனவிலங்குகளே காடுகளில் நடந்து மனிதர்கள் செல்வதற்கான வழித்தடத்தை உருவாக்குகிறது. அவற்றின் கழிவுகள் மண்ணை பல மடங்கு வளப்படுத்தி வைக்கிறது என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. நாம் அழிவின் பிடியில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றுவதை விட, அவற்றுக்கு தொல்ைல கொடுக்காமல் தள்ளி நின்றாலே போதுமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
யானைகளின் இறப்பால் இயற்கைக்கு பெரும் சீரழிவு
‘‘யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 250 கிலோ அளவிலான உணவை உட்கொள்கிறது. அவற்றில் 70 சதவீதத்தை சாணமாக வெளியேற்றுகிறது. அவை உரமாகவும், மரங்கள் வளர்வதற்கு விதையாகவும் பயன்படுகிறது. யானை தனக்காக தயார் செய்யும் உணவில், பெரும் பகுதியை அப்படியே விட்டுச் செல்கிறது. அவை சிறிய விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது.
வன உணவுச்சங்கிலியில் யானையின் பங்கு முக்கியமானது. அடர்ந்த காடுகளில் தங்களின் இடப்பெயர்ச்சியின் மூலம், வழித்தடங்களை ஏற்படுத்தி தருவதே யானைகள் தான். யானைகள் ஏற்படுத்தி தரும் வழித்தடங்களால் தான், பிற உயிரினங்கள் இடம் பெயர முடிகிறது. இனப்பெருக்கமும் நடக்கிறது. மிகமுக்கியமாக வனத்தின் வளர்ச்சிக்கு யானையின் பங்கு மிகவும் முக்கியம். இதை உணர்ந்து யானைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாமல், பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்,’’ என்பதும் வனஉயிரியல் ஆர்வலர்களின் அறிவுரை.
காட்டுயிர் சரணாலயம் உருவானால் பாதுகாப்பு
‘‘தமிழக-கர்நாடக எல்ைலப்பகுதியான ஓசூர், மாநிலத்தின் வனப்பரப்பு அதிகம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. ஓசூர் வனக்ேகாட்டம் 1,501 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராயக்கோட்டை, ஜவளகிரி, உரிகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெஸ்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, பிலிக்கல், உலிகம், மல்லஹள்ளி, தகட்டி, உலிபண்டா, உப்ரானி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, ஓடப்பட்டி என்று 478 சதுர கிலோ மீட்டர், தர்மபுரி மாவட்டத்தில் ஒட்டப்பட்டி, கூட்ராயன், மொரப்பூர், கேசர்குளியில் 208.64 சதுரகிலோ மீட்டர் என்று மொத்தம் 686 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு இடம் பெறுகிறது. இங்கு காட்டுயிர் சரணாலயம் அமைந்தால் யானைகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களை பாதுகாப்பதற்கான முக்கிய அம்சங்களும் உருவாகும்,’’ என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் நம்பிக்கை.
The post சுற்றுச்சூழல் மேம்பட பாதுகாப்பது அவசியம் அழிவின் விழிம்பில் 27% வனவிலங்குகள் : விழிப்புணர்வு நாளில் ஆய்வாளர்கள் தகவல் appeared first on Dinakaran.