×

மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு நடிகர் சிங்கமுத்து ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

சென்னை: நடிகர் சிங்கமுத்து யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

பதில் மனுவில், வடிவேலுவுக்கு எதிராக அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை அவர் தனது மனுவில் குறிப்பிடவில்லை. அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனது சொந்த அனுபவத்தையும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துகளையும் மட்டுமே அந்த பேட்டியில் தெரிவித்தேன். இந்த விவகாரம் தொடர்பாக வடிவேலு தரப்பில் எனக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீசுக்கு அளித்த பதிலில், வருத்தம் தெரிவித்தேன்.

ஆனாலும், என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளேன். பிற நகைச்சுவை நடிகர்களுக்கு நகைச்சுவை காட்சிகள் எழுதிக் கொடுப்பதற்கு வடிவேலு அனுமதிப்பதில்லை. நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் இருந்துள்ளேன். அதன் காரணமாக அவர் பணம் புகழ் சம்பாதித்தார். நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை.

மாறாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை இன்று வரை தான் சந்தித்து வருகிறேன். எனது பேட்டியை முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. தற்போது அந்த பேட்டி யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.  அவரைப் பற்றி பேச தடை கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் நடிகர் வடிவேலுவின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி டீக்காராமன் வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு நடிகர் சிங்கமுத்து ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Singamuthu ,Court ,Vadivelu ,CHENNAI ,YouTube ,
× RELATED வடிவேலுவுக்கு எதிராக பேச மாட்டேன் : சிங்கமுத்து