×

சர்ச்சை பேச்சு.. நடிகை சமந்தா பற்றி வாய் தவறி கூறிவிட்டேன்: மன்னிப்புக் கோரினார் தெலுங்கானா அமைச்சர் சுரேகா..!!

ஹைதராபாத்: நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகள் குறித்தது சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகளையும், வி.ஆர்.எஸ். கட்சியின் செயல்தலைவரும், சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமராவையும் தொடர்புபடுத்திப் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா விமர்சனம் செய்திருந்தார்.

நடிகைகளின் தொலைபேசி உரையாடலை ராமராவ் ஒட்டுக்கேட்டார் என்றும் அதை வைத்து அவர்களை மிரட்டினார் எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார். மேலும், கே.டி.ராமாராவ் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது பல ஹீரோயின்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளார். ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கியது இவர்தான். சினிமா துறையில் இருந்து சிலர் விலகி இருப்பதற்கும் அவர்தான் காரணம். நடிகர் நாக சைதன்யா- நடிகை சமந்தா விவாகரத்து செய்ததற்கும் கே.டி.ராமாராவ் தான் காரணம் என அவர் கூறியிருந்தார். தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த கருத்துக்கு தெலுங்கு திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா மோசமான கருத்துகளை கூறியிருந்ததற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். மேலும் தங்கள் விவாகரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நடிகை சமந்தா பற்றி வாய் தவறி கூறிவிட்டேன் என்று தெலங்கானா வனத்துறை அமைச்சர் சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமந்தா, எனது கருத்துகள் ஒரு தலைவர், பெண்களை இழிவுப்படுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு மட்டும் போற்றுதலுக்குரியதாக இல்லை. நீங்கள் அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள். கே.டி.ஆர். குறித்து விமர்சனம் செய்யும் அவசரத்தில் வாய் தவறி பேசிவிட்டேன். எனது பேச்சால் சம்பந்தபட்டவர்களின் மனம் புண்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது கருத்துகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ மனம் புண்பட்டிருந்தால் அந்த கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன். அரசியல் கண்ணோட்டத்திலோ அல்லது வேறுவிதமாகவோ இதை பெரிதாக்க வேண்டாம். இவ்வாறு சுரேகா கேட்டுக் கொண்டுள்ளார்.

The post சர்ச்சை பேச்சு.. நடிகை சமந்தா பற்றி வாய் தவறி கூறிவிட்டேன்: மன்னிப்புக் கோரினார் தெலுங்கானா அமைச்சர் சுரேகா..!! appeared first on Dinakaran.

Tags : Samantha ,Telangana ,Minister Sureka ,Hyderabad ,Forestry Minister ,Konda Sureka ,V. R. S. ,Chandrasekharara ,K. D. ,Ramara ,
× RELATED பல நடிகைகள் மறுத்த வேடத்தில் சமந்தா நடித்ததால் பண்ணை வீடு பரிசு