×
Saravana Stores

ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம்: சாதிக்கும் முனைப்பில் இந்தியா

ஷார்ஜா: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டியின் 9வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டி அங்கு நிலவும் கலவர சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஷார்ஜாவில் இன்று மாலை நடைபெற உள்ள முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து, இரவு நடைபெறும் 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அரையிறுதி ஆட்டங்கள் அக்.17, 18ல் ஷார்ஜாவில் நடைபெறும். பைனல் அக்.26ல் துபாயில் நடைபெற உள்ளது. 2020ல் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்தியா, அதில் ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2023ல் பி பிரிவில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, அதிலும் ஆஸி.யிடம் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் தொடர்ந்து 3வது முறையாக டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்தியா, இம்முறையாவது சாம்பியன் பட்டம் வென்று சாதிக்குமா என்ற கேள்வி/எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரலேியா, இலங்கை

பி பிரிவு: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா

லீக் சுற்றில் இந்தியா
தேதி எதிரணி களம்
அக்.4 நியூசிலாந்து துபாய்
அக்.6 பாகிஸ்தான் துபாய்
அக்.9 இலங்கை துபாய்
அக்.13 ஆஸ்திரேலியா ஷார்ஜா
இது வரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் 2வது இடம்
2009 இங்கிலாந்து நியூசிலாந்து
2010 ஆஸ்திரேலியா நியூசிலாந்து
2012 ஆஸ்திரேலியா இங்கிலாந்து
2014 ஆஸ்திரேலியா இங்கிலாந்து
2016 வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா
2018 ஆஸ்திரேலியா இங்கிலாந்து
2020 ஆஸ்திரேலியா இந்தியா
2023 ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா

இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், யஷ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்கள்), ஹேமலதா தயாளன், ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா, எஸ்.சஜனா, ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ரேணுகா சிங்.

* முதல் உலக கோப்பையில் மட்டுமே ஆஸி. பைனலில் விளையாடவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக 7 பைனலில் விளையாடி 6ல் வென்றுள்ளது. 2016ல் இந்தியாவில் நடந்த பைனலில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று 2வது இடம் பிடித்தது.
* இதுவரை நடந்த 8 உலக கோப்பையில், ஆஸ்திரேலியா 6 முறை சாம்பியனாகி ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
* இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.
* முதல் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து, அதன்பிறகு 3 முறை பைனலுக்கு முன்னேறியது. அந்த 3 முறையும் ஆஸி.யிடம் தோற்று 2வது இடத்தை பிடித்தது.

* போட்டியை நடத்திய நாடுகள்
இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2010), இலங்கை (2012), வங்கதேசம் (2014), இந்தியா (2016), வெஸ்ட் இண்டீஸ் (2018), ஆஸ்திரேலியா (2020), தென் ஆப்ரிக்கா (2023). இம்முறை வங்கதேசத்துக்கு பதிலாக போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம், பங்கேற்க தகுதி பெறவில்லை.

The post ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம்: சாதிக்கும் முனைப்பில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Women's T20 World Cup ,United Arab Emirates ,Kolagala ,India ,Sharjah ,ICC Women's T20 World Cup ,Bangladesh ,Dinakaran ,
× RELATED ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை இறுதி...