×

டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம் குறித்து ஆய்வு தரமான பொருட்கள் கொள்முதல் செய்து பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: பொதுப்பணித் துறையின் கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தரச்சோதனை செய்து, தரமான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். புதுடெல்லி மிக தீவிர நிலஅதிர்வு ஏற்படும் மண்டலமாக உள்ளதால், நில அதிர்வைத் தாங்கும் வகையில், புதுடெல்லி சாணக்யபுரி, தமிழ்நாடு இல்ல வளாகத்தில் உள்ள பழைய வைகை இல்ல கட்டிடங்கள் அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இக் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் புதுடெல்லியில் உள்ள பொதிகை இல்ல கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இக்கட்டிடம் தீவிர நிலஅதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, ரூ.257 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடம் அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டு, மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில், பணியாளர் குடியிருப்பு பகுதி, விருந்தினர் இல்ல பகுதி மற்றும் மிக முக்கிய பிரமுகர் பகுதி ஆகிய 3 பகுதிகளாகக் கட்டப்பட்டு வருகிறது.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: குளிர்கால காற்று மாசுவை தடுக்கும் விதமாக, கட்டுமான பணிகளுக்கான 14 அம்ச கட்டுப்பாடுகளை புதுடெல்லி அரசு அறிவித்துள்ளது. பணித்தளத்தில் அக் கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கட்டுமான தளத்தினை சுற்றி முழுவதுமாக இரும்புத் தகடு தடுப்பு அமைக்கப்பட வேண்டும். நச்சுப் புகையை அகற்ற, பணித்தளத்தில் போதுமான தண்ணீர் தெளிப்பான் கருவிகளை பொருத்த வேண்டும். பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியிலும், அடித்தளம் வானம் தோண்டும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கண்காணிக்கும் பொறியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு சாதனங்கள் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களைக் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தரச்சோதனை செய்து, தரமான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியையும் பொறியாளர்கள் தரச்சோதனை செய்ய வேண்டும். பணிகள் டிசம்பருக்குள் முடிக்குமாறு திட்ட அட்டவணை தயாரித்து பணி முன்னேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், புதுடெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி விஜயன், செயலாளர்கள் மங்கத் ராம் சர்மா, செல்வராஜ், பொதுப்பணித்துறையின் புதுடெல்லி உள்ளுறை ஆணையர் ஆஷிஷ்குமார், முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சிறப்புப் பணி அலுவலர் விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் மணிவண்ணன் துறைச் சார்ந்த பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

The post டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம் குறித்து ஆய்வு தரமான பொருட்கள் கொள்முதல் செய்து பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Minister AV Velu ,CHENNAI ,Minister ,A.V. Velu ,Public Works Department ,New Delhi ,Delhi Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சிலை கடத்தல் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு