×

ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சோதனை தொடங்கியது மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து பில் போட்டு விற்கும் ஊழியர்கள்: விரைவில் தமிழகம் ழுழுவதும் அமல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோதனை ஓட்டமாக 7 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து ஊழியர்களால் ‘பில்’ வழங்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய கடைகளை நவீன மயமாக்கும் முயற்சிகள் டாஸ்மாக் நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோடு அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுபாட்டில்களில் கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இவற்றில் வாணாபாடி, லாலாப்பேட்டை, வன்னிவேடு, தாஜ்புரா, நந்தியாலம், ராணிப்பேட்டையில் உள்ள 2 கடைகள் என 7 டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனையாளர்களுக்கு கையடக்க ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் உள்ள ஊழியர்கள் கையடக்க கருவி மூலம் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து ரசீது வழங்கி வருகின்றனர். மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது,

இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ராணிப்பேட்டை கடைகளில் நடைபெறும் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை கணினி மயமாக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சோதனை தொடங்கியது மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து பில் போட்டு விற்கும் ஊழியர்கள்: விரைவில் தமிழகம் ழுழுவதும் அமல் appeared first on Dinakaran.

Tags : Ranipet ,district ,Tasmac ,Tamil Nadu ,Ranipet district ,Ranippet district ,Amal ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்