×

செங்கல்பட்டு – ஆத்தூர் சுங்கச்சாவடி வரை தொடர் விபத்துகளை தவிர்க்க சாலை விரிவாக்கம் செய்வது எப்போது? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்வது எப்போது என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக உள்ளது. இந்த சாலையில் அவ்வப்போது அதிகளவில் விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு விபத்திலும் நான்கு பேர், ஐந்து பேர் என தொடர்ந்து உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பல குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அச்சிறுப்பாக்கம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.மேலும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், வெளிநாடு வேலைக்கு சென்ற தனது கணவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் சென்ற கார் முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் வெளிநாடு சென்றவரின் மனைவி, இரண்டு மகன்கள், கார் ஓட்டுனர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இதேப்போல், புக்கத்துறை எனும் இடத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து தொடர்ச்சியாக மோதிய விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இது போன்ற பெரிய விபத்துக்கள் தவிர தினந்தோறும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிறு, சிறு விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த விபத்துகளிலும் ஒருவர், இருவர் என அவ்வப்போது இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த மதுராந்தகம் பகுதியானது தமிழகத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறக்கூடிய இடங்களில் ஒன்றாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் மேற்கு, தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னை நோக்கி வரும்போது, சென்னையின் நுழைவாயிலாக இந்த மதுராந்தகம் பகுதி அமைந்துள்ளது. எனவே, இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. செங்கல்பட்டு துவங்கி மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிற்கான இந்த நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. எனவே, இந்த விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டியது முக்கியமாக உள்ளது.இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு தங்கநாற்கர சாலை என்ற பெயரில் இந்த சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு சுமார் கால் நூற்றாண்டுகள் ஆகப்போகும் நிலையில் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளன.

இதனால், மக்கள் பலரும் பொது போக்குவரத்தை குறைத்துக் கொண்டு தங்களின் சொந்த வாகனங்களில் பயணிப்பதை அதிகம் விரும்புகின்றனர். இது போன்ற பல காரணங்களால் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. எனவே இந்த நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடமும் இந்த பகுதி மக்களிடமும் எழுந்துள்ளது.இவ்வாறு சாலை அகலப்படுத்தப்பட்டால் திருச்சி – சென்னை, சென்னை – திருச்சி இரு மார்க்கத்திலும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முடியும். அப்போது இது போன்ற விபத்துகளும் குறையும் என்கின்றனர். விபத்துக்கள் குறைவது ஒரு பக்கம் என்றாலும் பயணிகளின் பயண நேரமும் மிகவும் குறையும்.

மேலும், சென்னையில் பணிபுரியும் பலரும் தற்போது செங்கல்பட்டு, மதுராந்தகம் போன்ற பகுதிகளில் குடியிருந்து அங்கிருந்து தினந்தோறும் சென்னைக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். காரணம், இப்பகுதிகளில் வீட்டு வாடகை, மற்ற பொருட்களின் விலை சென்னையை விட குறைவு என்பதாலும், சென்னையை விட இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் மிகவும் குறைவு, அமைதியான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் பலர் இப்பகுதியில் குடியிருந்து சென்னை சென்று பணிபுரிந்து வீடு திரும்புகின்றனர். இது போன்று பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இந்த சாலை அகலப்படுத்தும் போது வசதியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

* பயனுள்ளதாக அமையும்
தாம்பரத்தில் இருந்து பரனூர் வரை 6 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உள்ள இந்த செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு வரையிலான பகுதிகளில் இருக்கும் இந்த நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றும்போது சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

* காத்திருக்கும் விவசாயிகள்
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்றளவும் காய்கறி விவசாயம் பிரதானமாக செய்யப்படுகிறது. விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பிரஷான காய்கனிகளை தினந்தோறும் சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வருகின்றனர். சாலை விரிவாக்கத்தால், விரைவாக காய்கனிகளை அனுப்பி வைக்க முடியும். அப்போது, அவர்களுக்கும் கூடுதல் விலை கிடைத்து லாபம் அதிகரிக்கும். எனவே, இந்த சாலை விரிவாக்கம் மிக அவசியமான என்றும், சாலை விரிவாக்கப்பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், இந்த சாலை விரிவாக்க பணியை விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

* நகர மயமாகும் பகுதிகள்
மதுராந்தகம், கருங்குழி, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகள் தற்போது மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. எனவே, இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்த 6 வழி நெடுஞ்சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்களின் மதிப்பு கூடும் அப்போது நில உரிமையாளர்கள் லாபம் அடைவார்கள். எனவே, சாலை விரிவாக்கம் என்பது அவசியம் ஆகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

* சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னையை ஒட்டிய இப்பகுதிகளின் பல இடங்களில் தற்போது மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள் என பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.இவற்றிற்கு வந்து செல்லும் நோயாளிகள், மாணவ மாணவியர், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் இந்த நான்கு வழி சாலை 6 வழியாக சாலையாக மாற்றப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post செங்கல்பட்டு – ஆத்தூர் சுங்கச்சாவடி வரை தொடர் விபத்துகளை தவிர்க்க சாலை விரிவாக்கம் செய்வது எப்போது? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu – Athur ,Madhurandakam ,Chengalpattu ,Attur Toll Road ,Chennai - Trichy ,Madhuranthakam ,Melmaruvathur ,Achirupakkam ,Chengalpattu - Athur toll ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சி சார்பில் 102 பேருக்கு போர்வைகள்