×

பாதுகாப்பு பணியில் 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட சென்னை விமான நிலைய மோப்ப நாய்க்கு ஓய்வு: பதக்கங்கள் வழங்கி கண்ணீர் மல்க வழியனுப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக மோப்ப நாய்கள் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவில் பயிற்சி பெற்ற 10 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன. இந்த மோப்ப நாய்கள் பிரிவில் கடந்த 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்த சீசர் என்ற 9 வயது மோப்ப நாய் தனது எட்டரை ஆண்டு கால பணியை நேற்றுடன் நிறைவு செய்துவிட்டு ஓய்வு பெற்றது. இந்த மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நேற்று பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படை அலுவலகத்தில் நடந்தது. அப்போது சிறப்பாக பணி செய்து ஓய்வு பெறும் சீசருக்கு பதக்கங்கள், மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதோடு சீசருக்குப் பதிலாக, புதிதாக வந்துள்ள யாழினி என்ற மோப்ப நாய்க்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும் அதே இடத்தில் நடந்தது.

சீசருக்கு வழியனுப்பும், யாழினிக்கு வரவேற்பும் நடந்த விழாவில் கேக் வெட்டப்பட்டு, இரு மோப்ப நாய்களுக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்பு சிவப்பு கம்பள விரிப்பில், சீசர் அழைத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. அந்த வாகனத்தை மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி அருண் சிங், சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் மற்றும் உயர் அதிகாரிகள் இழுத்துச் சென்று, சீசரை வழி அனுப்பி வைத்தனர். சீசரை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் பராமரித்து வந்த பாதுகாவலர்கள் கண்ணீர் மல்க அழைத்துச் சென்றனர். புதிதாக பணியில் சேர்ந்துள்ள யாழினி மோப்ப நாய், பிரிட்டிஷ் நாட்டு வகையைச் சேர்ந்த ‘லாப்ர டோர் ரெட் ரிவர்’ இனத்தைச் சேர்ந்த 9 மாத நாயாகும். இதற்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் ஆறு மாத காலம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, இங்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

தத்து எடுக்கலாம்
சீசர், சில நாட்கள் சென்னையில் மோப்ப நாய்கள் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும். பின்பு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்ள ஓய்வுபெற்ற மோப்ப நாய்கள் புகலிடத்தில் சேர்க்கப்படும். இந்த மோப்ப நாயை தத்து எடுப்பதற்கு, விலங்கியல் ஆர்வலர்கள் யாராவது முன் வந்தால், விதிமுறைகளின்படி, ஒப்பந்தம் செய்து விட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சீசருக்கு பதிலாக யாழினி
சிஎஸ்எப் டிஐஜி அருண் சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை விமான நிலைய பாதுகாப்பில் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சீசருக்கு சிறப்பான முறையில் வழியனுப்பு விழாவை நடத்தினோம். இதையடுத்து சீசரின் இடத்தை நிரப்புவதற்கு, யாழினி என்ற புதிய மோப்ப நாய், சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படுகிறது’’ என்றார்.

The post பாதுகாப்பு பணியில் 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட சென்னை விமான நிலைய மோப்ப நாய்க்கு ஓய்வு: பதக்கங்கள் வழங்கி கண்ணீர் மல்க வழியனுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,CHENNAI ,Caesar ,
× RELATED சென்னை விமானநிலையத்தில்...