×

ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மோப்பநாயுடன் போலீசார் சோதனை திருவண்ணாமலை, செங்கத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செங்கம் தாலுகா அலுவகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு நேற்று மதியம் ஒரு மர்ம நபர் போன் செய்தார். அப்போது, திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) அலுவலகத்திற்கும், செங்கம் தாலுகா அலுவலகத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்துள்ளார். இந்த மிரட்டல் போன் தகவலால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் அலுவலக அறைகள் மற்றும் அலுவலகத்தின் வெளிப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்தது. ஆனாலும், எந்தவித வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. அதேபோல், செங்கம் தாலுகா அலுவலகத்தில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடந்தது. அங்கேயும் வெடி பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. எனவே, இரண்டு இடங்களிலும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதன் பிறகு, போலீசார் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் தீவிர சோதனை நடத்தியதால் திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்திலும், செங்கம் தாலுகா அலுவலகத்திலும் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மோப்பநாயுடன் போலீசார் சோதனை திருவண்ணாமலை, செங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : RTO ,Thiruvannamalai, Sengam ,Thiruvannamalai ,Thiruvannamalai Revenue Commissioner ,Sengam taluk ,Thiruvannamalai, ,Senga ,
× RELATED தாராபுரம் ஆர்டிஓ உத்தரவு மீறல்; தீவன...