×

ஒரு வருடமாக பணிகளை செய்யாமல் மோதல் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவரின் செக் பவர் நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி

தாம்பரம்: வளர்ச்சி திட்ட பணிகளை செய்யாமல் மோதலில் ஈடுபட்டதால் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவரின் செக் பவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புனித தோமையர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரப்பாக்கம் ஊராட்சியில் தலைவராக வேல்முருகன் என்பவரும், துணைத் தலைவராக புருஷோத்தமன் என்பவரும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஊராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடைபெறாமல் இருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் சார்பில் துணைத் தலைவர் புருஷோத்தமன் மீது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புருஷோத்தமன் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் மீதும் அங்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஊராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளான குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றம் போன்ற பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது தெரிய வந்தது. மேலும் ஊராட்சி தலைவர், துணை தலைவர் இடையே ஒருமித்த கருத்தொற்றுமை இல்லாததும் தெரிய வந்தது.

எனவே ஊராட்சி நிர்வாக சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் உரிய உத்தரவு வழங்கப்படும் வரை மதுரப்பாக்கம் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து வங்கி கணக்குகளின் பணப்பரிவர்தனையும், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஊராட்சியின் பணியாளர்கள் ஊதியம் மற்றும் அத்தியாவசிய செலவினங்கள் தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஒரு வருடமாக பணிகளை செய்யாமல் மோதல் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவரின் செக் பவர் நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Madurapakkam Panchayat Council ,Vice Chairman ,Tambaram ,President ,Vice President ,Velmurugan ,Madurapakkam panchayat ,Stomaiyar panchayat union ,Purushothaman ,
× RELATED பூதலூர் ஒன்றிய குழு கடைசி கூட்டம் நன்றி தெரிவித்து விடைபெற்ற தலைவர்