×

அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி 16.10.2024 (புதன் கிழமை) அன்றும் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி 18.10.2024 (வெள்ளி கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சு போட்டிகள் செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 9 மணிக்கும் தொடங்கப்பட உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கும், கல்லூரி மாணவ, மாணவியருக்கும் தனித்தனியே கீழ்கண்ட தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் அனைத்து தலைப்புகளையும் தயார் செய்து வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் தலைப்பை பற்றி பேச வேண்டும்.
வரும் 16ம் தேதி அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்

* பள்ளி நடைபெறும் போட்டியின்‌ தலைப்பு
1. அண்ணாவின் சமூகப் பணிகள்
2. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு
3. காஞ்சித் தலைவன் அண்ணா

* கல்லூரியில் நடைபெறும் தலைப்புகள்
1. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
2. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
3. மாபெரும் தமிழ்க்கனவு

* வரும் 18.102024 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான பள்ளியில் தலைப்புகள் பின்வருமாறு
1. வைக்கம் வீரர்
2. பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள்
3. சுயமரியாதை இயக்கம்

* கல்லூரியில் நடைபெறும் தலைப்புகள்
1. பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
2. மூட நம்பிக்கைகளை வேரறுத்த பெரியார்
3. தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்

இப்போட்டியில், கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. இதேபோன்று, பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப் பெறவும் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna ,Periyar ,Chengalpattu ,Tamil Development Department ,District ,Collector ,Arunraj ,Dinakaran ,
× RELATED மறைமலை நகர் நகராட்சி பகுதியில்...