×

குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றையானை நெற்பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அங்கனாம்பள்ளி கிராமம் ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அதேபோல் நேற்று நள்ளிரவு ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. இந்த யானை அங்கனாம்பள்ளி கிராமத்தில் நுழைந்தது. பின்னர் விவசாய நிலத்திற்கு சென்ற யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களையும், மாமரங்களையும் சேதப்படுத்தியது. யானை பிளீரும் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது வயலில் இறங்கி ஒற்றை யானை அட்டகாசம் செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் யானை, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த யானை மீண்டும் கிராமத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படும் என்பதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் யானை மீண்டும் ஊருக்குள் நுழையாதபடி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யானை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

 

The post குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Anganampally village ,Vellore district ,Andhra state ,
× RELATED அரசு பள்ளிகளை தரம் உயர்த்த...