டெல்லி: தமிழ்நாட்டை போல் டெல்லியிலும் செஸ் வீரர்களுக்கும், செஸ் போட்டிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற மகளிர் அணியில் அங்கம் வகித்த டானியா சச்தேவ் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்கில் டிவி தொகுப்பாளராக இருந்த டானியா சச்தேவ் ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பங்குபெற்றதோடு தான் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி 3 டிரா என்று இந்திய மகளிர் அணி தங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். தங்கம் வென்றது குறித்து செய்தியாளர்களிடம் டானியா கூறியதாவது: ஒலிம்பிக் தொடரில் டிவி தொகுப்பாளராக கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான் ஒலிம்பியாட்டில் பங்கேற்க தேர்வானேன். ஆரம்பத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் செஸ் தொடர்களில் பங்கேற்காத என்னால் செஸ் ஒலிம்பியாட்டில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் மீண்டும் மீண்டும் எழுந்தது. இருந்தும் தன்னம்பிக்கையுடன் போட்டிகளை எதிர்கொண்டேன். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. டிவி தொகுப்பாளராக நான் பணியாற்றியபோது அந்த பணியை மிகவும் மகிழ்ச்சியாக செய்தேன். ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் போது அதிக பொறுப்புகள் இருக்கிறது என்பதால் மிகவும் கவனமாக விளையாடினேன். அடுத்த முறையும் செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி தங்கம் வெல்லலாம். ஆனால் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்ற அணியில் நான் இடம் பிடித்ததை நினைத்தால் இப்போதும் என் கண்கள் ஆனந்த கண்ணீரில் தத்தளிக்கிறது.
மேலும் விளையாட்டில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கு முன்பே தங்கம் வென்றதால் என் வாழ்நாள் பலனை அடைந்துவிட்டேன். செஸ் விளையாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. செஸ்சில் சாதித்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தமிழக அரசு கவுரவ படுத்தி அழகு பார்த்தது. மேலும் கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதை எல்லாம் பார்க்கும்போது டெல்லியிலும் செஸ் போட்டிகளுக்கு, செஸ் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கவுரவிக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற செஸ் உலக கோப்பை தொடரில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையிலான போட்டியில் தொகுப்பாளராக டானியா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
The post செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில் தமிழகம் முதலிடம்; ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற டானியா சச்தேவ் பேட்டி appeared first on Dinakaran.