×

தண்டராம்பட்டு அருகே விவசாய நிலத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

தண்டராம்பட்டு, செப்.30: தண்டராம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சி, மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35), மேஸ்திரி. இவரது மனைவி பாரதி. இவர்களது மகன் ரோஷித்(7). அதே பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன்(42), வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா. இவர்களது 3வது மகன் தருண்(7).

சிறுவர்கள் ரோஷித், தருண் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தனர். பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை ஐயப்பனின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சிறுவர்கள் ரோஷித், தருண் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். வெளியே விளையாடுவதற்காக சென்ற பிள்ளைகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பாரதி, மேனகா ஆகிய இருவரும் அங்கிருந்த மற்ற சிறுவர்களிடம் விசாரித்தனர். அப்போது, ஐயப்பனின் நிலத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றது தெரியவந்தது.

உடனடியாக கிராம மக்களுடன் அங்கு சென்று பார்த்தபோது, சிறுவர்களின் செருப்பு மற்றும் ஆடைகள் கிணற்றின் கரையில் இருந்தது. இதனால் கிராம இளைஞர்கள் சந்தேகம் அடைந்து கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் கிணற்று நீரில் மூழ்கியதில் மயங்கிய சிறுவர்கள் ரோஷித், தருண் ஆகிய இருவரையும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ெகாண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். அதில், விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த 2 சிறுவர்களும் விளையாட்டாக கிணற்றில் குளிக்க சென்றதும், நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், 2 சிறுவர்களின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

The post தண்டராம்பட்டு அருகே விவசாய நிலத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Thandarampatu ,Ayyappan ,Maluvampatu ,Vanapuram panchayat ,Tiruvannamalai district ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 36: சுவாமி ஐயப்பன்