திருமலை: திருப்பதி லட்டு தயாரித்த நெய்யில் கலப்படம் குறித்து 2வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், லட்டு சர்ச்சையை விசாரிக்க ஆந்திர அரசு சார்பில், ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு(எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் திருப்பதி வந்த விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து 2ம் நாளாக நேற்றும், நெய் கலப்படம் தொடர்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக டிஐஜி கோபிநாத் ஜெட்டி, எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு, கூடுதல் எஸ்.பி. வெங்கடராவ் ஆகியோர் 3 குழுக்களாகப் பிரிந்து விசாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தேவஸ்தான கொள்முதல் பொது மேலாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகாரில் உள்ள குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்காக அறங்காவலர் குழு முதல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கு வரை அனைத்து அம்சங்களும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது. மேலும், நெய் கலப்பட வழக்கின் முழு விவரங்களை அறிய எஸ்ஐடி அதிகாரிகள் செயல் அதிகாரி ஷியாமளா ராவை சந்திக்க உள்ளனர். கலப்பட நெய் சப்ளை செய்த ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை விசாரிக்க குழு ஒன்று திண்டுக்கல் செல்கிறார்கள்.
மேலும், மற்றொரு குழுவினர் திருமலை சென்று லட்டு தயாரிக்கும், விற்பனை மையங்கள், லட்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆய்வு செய்து லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். மற்றொரு குழு, திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் நெய் கொள்முதல், ஒப்பந்தங்கள் மற்றும் தரமான நெய் சப்ளை செய்வதற்கான தேவஸ்தானம் மற்றும் ஏ.ஆர்.டெய்ரி இடையேயான ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
The post லட்டு நெய்யில் கலப்பட விவகாரம் திருப்பதியில் 2வது நாளாக அதிகாரிகள் குழு விசாரணை appeared first on Dinakaran.