×

மே.வங்க வெள்ளத்தை சமாளிக்க ஒன்றிய அரசு உதவவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரை சமாளிக்க ஒன்றிய பாஜ அரசு உதவவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்கத்தில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் வடக்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “வடக்கு வங்கம் வௌ்ளத்தில் தத்தளிக்கிறது. கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ள பாதிப்புகளை திரிணாமுல் அரசு போர்க்கால அடிப்படையில் சமாளித்து வருகிறது. ஆறுகளின் அருகே வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்ற பொது முகவரி அமைப்பை மாநில அரசு தொடங்கி உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “பாஜ தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மேற்குவங்கத்துக்கு வருவார்கள். பின்னர் குறிப்பாக இந்த மாநிலத்தை மறந்து விடுவார்கள். மேற்குவங்கத்துக்கு மட்டுமே வௌ்ள நிவாரணம் வழக்கப்படுவதில்லை. இயற்கை பேரிடர்களை சமாளிக்க மேற்குவங்கத்துக்கு பாஜ அரசு உதவவில்லை. நாங்கள் பலமுறை நினைவூட்டியும் பராக்கா அணையின் பராமரிப்பு பணிகளை ஒன்றிய அரசு செய்யவில்லை. இதனால் அணையின் கொள்ளளவு வெகுவாக குறைந்து விட்டது” என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

The post மே.வங்க வெள்ளத்தை சமாளிக்க ஒன்றிய அரசு உதவவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Bengal ,Mamata Banerjee ,Kolkata ,Chief Minister ,Union BJP government ,West Bengal ,Damodar Valley dams ,Union government ,
× RELATED அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்