×

கோ-ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை ரூ.1.78 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

ஈரோடு, செப். 29: வசந்தம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்தாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.78 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி வருகின்றது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது. தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சிறப்புத்தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள் ஆர்கானிக்பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வசந்தம் கோ-ஆப்டெக்ஸில் கடந்தாண்டு தீபாவளி விற்பனையாக ரூ.1.01 கோடி மற்றும் கோபிசெட்டிபாளையம் விற்பனை நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்றுள்ளது.

இந்தாண்டு தீபாவளி இலக்காக வசந்தம் கோ-ஆப்டெக்ஸில் ரூ.1.40 கோடியும், கோபிசெட்டிபாளையம் விற்பனை நிலையத்தில் ரூ.38 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோ-ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை ரூ.1.78 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Co-Optexil ,Diwali ,Erode ,Vasantham Co Optex ,Vasantham Co-Optex Outlet ,Gandhiji Road ,Raja Gopal ,Co-Optex ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு...