×

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

ஈரோடு, செப். 29: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் கலெக்டர் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இன்னல்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக்குழு சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

மேலும், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், வடிகால்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண் : 1077, 0424-2260211ல் தெரிவிக்க வேண்டும். பருவமழைக்காக வட்டார அளவில் அமைக்கப்பட்ட பல்துறை அலுவலர் அடங்கிய மண்டல குழுவினர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அது தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட துறையின் அலுவலருக்கு தெரிவித்து உடனடியாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளதா எனவும், அதன் முழு அகலத்திற்கும் நீர்வழிப்பாதை உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெருமழை வெள்ள நீர் தடையின்றி செல்லும் வகையில் கழிவுநீர்ப்பாதைகளை பெருந்திட்ட பணிகள் மேற்கொண்டு சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அணைகள், ஏரிகளின் உபரி நீர் வெளியேற்றும் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறும் நீர்வழிப் பாதைகளை அவ்வப்போது ஆய்வு செய்து உபரி நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும். ஈரோடு மாவட்டத்திலுள்ள 17 மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில் சாலைகளில் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்ய மாற்றுப்பாதைகள் கொண்ட திட்ட வரைவு வைத்து கொள்ள வேண்டும். மின்சாரத்துறை, பலத்த காற்று மற்றும் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில் அவற்றை உடனடியாக சரி செய்ய தேவையான பணியாளர் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிவாரண முகாம்களான பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள் ஆகியவைகளை பொதுப்பணித்துறை அலுவலர்களால் நேரில் தணிக்கை செய்து அவற்றின் கட்டிட உறுதி தன்மையை உறுதி செய்திட வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம், பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றின் நீர்வழிப்பாதைகளில் இருபுறங்களிலும் தூர்வாரி நீர்வழிப்பாதைகளை சீர் செய்யவேண்டும். நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட மதகுகள் மற்றும் சாலைப்பாலங்களில் வெள்ள நீர் வடிந்து செல்வதற்காக உள்ள மதகுகள் அனைத்தையும் புலத்தணிக்கை மேற்கொண்டு அதில் உள்ள செடிகொடிகள் அகற்றி சுத்தம் செய்து வெள்ள நீர் தடையின்றி வடிந்து செல்லத்தக்க வகையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் எஸ்பி ஜவஹர், மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா, பிரேமலதா, கோபி ஆர்டிஓ சதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon Progress Works ,Erode ,Northeast Monsoon ,Raja Gopal Sunkara ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள...