- திருக்கழுக்குன்றம் தாலுக்கா
- திருப்பலுக்கன்ரம்
- திருக்கழுக்குன்றம் தாலுக்கா
- திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம்
- தின மலர்
திருக்கழுக்குன்றம், செப்.29: திருக்கழுக்குன்றம் தாலுகாவில் மொத்தம் 103 கிராமங்கள் உள்ளன்அ. இதில், பெரும்பாலான கிராமங்கள் விவசாய கிராமங்களாகும். விவசாயிகள் நிறைந்த இந்த தாலுகாவில் உள்ள விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் தங்களுக்கான சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, நில உரிமைச் சான்று மற்றும் நிலத்தின் மெய்த்தன்மை சான்றுகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு இந்த தாலுகா அலுவலகம்தான் வரவேண்டும்.
இவ்வாறு, மனு கொடுப்பதற்காக வந்தால் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலும் இருப்பதில்லை. இருக்கின்ற சில அதிகாரிகளும் விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் கோரிக்கைகள் சார்ந்த மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. உரிய பதில்கூட சொல்லாமல் அலட்சியப்படுத்தி அனுப்புவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது மட்டுமின்றி நில அளவைப்பிரிவு மிகவும் மோசம் என்ற நிலையில் உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது நிலத்தையோ அல்லது வீட்டு மனையையோ அளவீடு செய்வதற்கோ, அளவீடு செய்து பட்டா உட்பிரிவு செய்வதற்கோ மனு கொடுத்தால், அதிகாரிகள் இன்று வந்து அளவீடு செய்கிறோம், நாளை வந்து அளவீடு செய்கிறோம் என்று சொல்லி பல மாதங்கள் அலைகழிக்கப்பதால் பொதுமக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு பல நாட்கள் காத்திருந்து ஏமாந்து செல்கின்றனர்.மேலும், அலுவலகத்தை முகாமிட்டு சுற்றிவரும் புரோக்கர்கள் மூலம் சென்றால், எவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று பேரம் பேசி முடித்த பின்னரே நிலம் மற்றும் வீட்டு மனைகளை அளவீடு செய்வதும், பட்டாக்கள் பெறவும், சான்றுகள் பெறவும் முடிகிறது என்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், ஏழைகளுக்கு வேலை செய்யாமல் பணக்காரர்களுக்கு மட்டுமே இவர்கள் கடமையாற்றுகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். திருக்கழுக்குன்றம் தாலுகாவிலடங்கிய மாமல்லபுரம், கல்பாக்கம் இசிஆர் பகுதியை ஒட்டியுள்ள சில கிராமங்கள் சமீப காலமாக வளர்ந்து வரும் நகரமாகி வருகிறது.
இந்த, கிராமங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள், உயர்மட்ட அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பெருந்தலைகள் நிலம் மற்றும் பண்ணை தோட்டம் ஆகியவற்றை வாங்கி வருகின்றனர்.அப்படிப்பட்ட பெருந் தலைகளை காத்திருக்க விடாமல், அவர்கள் மனு செய்தவுடன் ஓடோடிச் சென்று நிலத்தை அளவீடு செய்வதும், பட்டா மாற்றி தருவதும், பட்டா உட்பிரிவு செய்து தருவதும், சான்று வழங்குவதும் என கடமை புரிகிறார்கள்.
ஆனால், ஏழை விவசாயிகள் எந்த வேலையாக வந்தாலும் காத்திருப்பு பட்டியலில் வைத்து விடுகின்றனர் என்று பெரிய அளவில் பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விஷ ஜந்துக்களின் புகலிடம்
அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் அடர்ந்து கிடப்பதால் அதில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் தஞ்சமடைகின்றன. அவை சில நேரங்களில் அலுவலகத்தினுள்ளும், அலுவலக வளாகத்திலும் வந்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இதனால். பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
பூட்டியே கிடக்கும் கழிப்பறை
தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் பயன்படுத்த அலுவலக வளாகத்தில் ஒரு கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டது. இது உரிய முறையில் பராமரிக்காமல் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. இதனால், அலுவலகம் வரும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஜெனரேட்டர் பழுது
அலுவலகத்திற்கென்று உள்ள பெரிய ஜெனரேட்டர் பல ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. அதை, முறையாக பழுது பார்த்து பயன்படுத்தாததால், மின்சாரம் தடைபடுகின்ற நேரங்களில் கணிணி உள்ளிட்டவை இயங்காமல்போய் அலுவலக பணி செய்ய முடியாமல் பல மணி நேரம் சிரமம் ஏற்படுகிறது.
The post பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறதா? புரோக்கர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம்: பாரபட்சம் பார்த்து பணி நடப்பதாக பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.